சென்னை அருகே 10 வயது சிறுமி தண்ணீர் லாரி மோதி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் போது தங்களை காப்பாற்ற யாருமே வரவில்லை என்று வேதனையுடன் கூறியுள்ளார் சிறுமியின் தாய்.
சென்னை அருகே நன்மங்கலத்தைச் சேர்ந்தவர் சிறுமி லியோ ராஜ் ஸ்ரீ(10). இவரது தாய் கீர்த்தி. சிறுமி படிக்கும் பள்ளியிலேயே அவரது தாயும் பணியாற்றி வருகிறார்.
இருவரும் இன்று காலை 8.45 மணியளவில் மடிப்பாக்கத்தில் உள்ள பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தனர். இரு சக்கர வாகனத்தில் சிறுமியை பின்னால் அமரவைத்துக்கொண்டு கீர்த்தி சென்றார்.
கோவிலம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த போது அவர்களுக்குப் பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் தாய் கீர்த்தி ஒருபக்கமும், சிறுமி ஒருபக்கமும் விழுந்ததில் சிறுமி மீது தண்ணீர் லாரி ஏறி மூச்சின்றி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இந்த சம்பவம் நடந்ததும் லாரி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் விசாரணை செய்தனர். பின்னர் தப்பியோடிய 28 வயதான லாரி ஓட்டுநர் டேவிட் ராஜன் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து தாய் கீர்த்தி, “லாரி மோதி கீழே விழுந்ததும் எங்களைத் தூக்குவதற்கு யாரும் வரவில்லை. நானேதான் என் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்” என்று கண்ணீர் மல்க கூறினார்.
அந்த பகுதி மக்கள் கூறுகையில், “இந்த பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால் வாகன நெரிசல் அதிகமாக இருக்கிறது. எனவே காலை மாலை வேளைகளில் நெரிசல் அதிகமாக இருக்கும் போது கனரக வாகனங்கள் இவ்வழியே செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினாலும் லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று கொண்டுதான் இருக்கின்றன. இதனால் மற்ற வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது” என்கின்றனர்.
தற்போது உயிரிழந்த சிறுமியின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சிறுமியின் தந்தை வெளிநாட்டில் பணி செய்கிறார். அவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, வந்து கொண்டிருக்கிறார் என்று சிறுமியின் உறவினர்கள் கூறுகின்றனர்.
விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் மீது ஐபிசி பிரிவு 279(அதிவேகமாக வாகனத்தை இயக்குதல்), 304 ஏ (அலட்சியத்தால் மரணம்) ஆகிய பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரியா
லூனா 25 தோல்வி: சந்திரயான் 3 நிலவில் தரையிறங்குவதில் பாதிப்பா?
சைலேந்திரபாபு டிஎன்பிஎஸ்சி தலைவராக எதிர்ப்பு: ஆளுநர் எழுதிய குறிப்பு!