விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்திருப்பது தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் குண்டாயிருப்பு கிராமத்தில் விஜய் என்பவருக்குச் சொந்தமான தனியார் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.
மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிகுண்டு கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கி வரும் இந்த ஆலையில் 74 அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வந்தனர்.
நேற்று (பிப்ரவரி 17) காலை பணியாளர்கள் வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் மதியம் 12:30 மணியளவில் ஒரு அறையில் பேன்சி ரக பட்டாசுகளுக்கு மருந்து வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது.
உராய்வு மற்றும் ரசாயனம் கலக்கும் அறையில் அதிகளவில் நபர்கள் இருந்ததே விபத்திற்கு காரணம் என அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த விபத்தால் முதலில் ஒரு அறை முழுவதுமாக இடிந்து விழுந்து சேதமடைந்ததோடு, பட்டாசு வெடித்துச் சிதறியதில் தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது.
நான்கு அறைகளில் வெடி விபத்து ஏற்பட்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில், அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ், கருப்பசாமி, முத்து அம்பிகா, முருக ஜோதி, சாந்தா என 4 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டைத் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
சம்பவ இடத்தில் மதுரை சரக டிஐஜி ரம்யா பாரதி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்குத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலா 3 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சிவகார்த்திகேயனால் கைவிடப்பட்ட படம்?
GOAT: தளபதி விஜய்க்கு ‘வில்லன்’ இவர்தான்?
ஆளுநர் பிரச்சாரப் பயணம் எப்போ? அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: இங்கே உதயநிதி… இந்திய அளவில் ஸ்டாலின் திமுகவின் பிரசார பிளான்!