வீணாக கடலில் கலந்த சென்னை மக்களின் ஒரு டிஎம்சி தண்ணீர்: என்ன காரணம்?

Published On:

| By Raj

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த மாதம் பெய்த மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், கடந்த மாதம் முதல் சுமார் ஒரு டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் போய் சேர்ந்துள்ளது. இது சென்னை மக்களின் ஒரு மாத குடிநீர் தேவை ஆகும். 

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம். 

பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். இதில் 3.231 டிஎம்சி தண்ணீர் சேமித்து வைக்கலாம். கடந்த மாதம் வடகிழக்கு பருவமழையின்போது பெய்த பலத்த மழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகி முழு கொள்ளளவை எட்டியது.

இதையடுத்து கடந்த மாதம் 12-ந் தேதி உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டது. பின்னர் நீர்மட்டம் குறைந்ததால் உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த திடீர் மழையாலும் பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது. 

இதையடுத்து பூண்டி ஏரியில் இருந்து 450 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் ஏரிக்குத் தொடர்ந்து 450 கனஅடி தண்ணீர் இன்னும் வந்து கொண்டு இருக்கிறது. கடந்த மாதம் முதல் உபரிநீர் வீணாக கடலில் போய் சேர்ந்து கொண்டிருக்கிறது. சுமார் ஒரு டிஎம்சி தண்ணீர் இப்படி வீணாக கடலில் போய் சேர்ந்துள்ளது. இது சென்னை மக்களின் ஒரு மாத குடிநீர் தேவை ஆகும். 

இதற்கு பதில் அளிக்கும் விதமாக, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளும் நிரம்பி உள்ளதால் பூண்டி ஏரியில் இருந்து இந்த ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்ப முடியாத நிலை உள்ளதால் உபரிநீராக வெளியேற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

“பலத்த மழையின்போது பூண்டி ஏரி நிரம்பும்போதெல்லாம் உபரிநீர் வீணாக கடலில் போய் சேர்ந்து கொண்டிருக்கிறது. புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து திறந்து விடும் தண்ணீரும் வீணாக கடலில் போய் சேர்ந்து கொண்டிருக்கிறது. இதைக் கருத்தில்கொண்டு உபரி நீரை சேமிக்கும் வகையில் புதிய திட்டங்களைச் செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 1 TMC water wasted in the sea

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share