ஆன்லைன் மோசடி : மீண்டும் ஏமாற நாடு தாண்டும் இளைஞர்கள்!

Published On:

| By Minnambalam Login1

1.50 crore cybercrime calls blocked

உலகம் முழுவதும் ஆன்லைன் மூலம் பணமோசடி செய்யும் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல.

மக்கள்  தொகையும் மிக அதிகமாக இருப்பதால் ஆன்லைன் மோசடி கும்பல் இந்தியர்களை மிக அதிக அளவில் ஏமாற்ற முயல்கிறார்கள். அதில் பல ஆயிரம் பேரை ஏமாற்றி பல கோடி ரூபாய் பணமும் பறித்துள்ளார்கள்.

லாவோஸ், கம்போடியா, தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து தான் மிக அதிகமான ஆன்லைன் பணமோசடி நடைபெறுகிறது. இதற்காக இந்தியர்களை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்களைக் குறிவைக்கும் இந்த ஆன்லைன் பணமோசடி கும்பல், வேலை வாங்கி தருவதாகக் கூறி சுற்றுலா விசாவில் லாவோஸ், கம்போடியா போன்ற நாடுகளுக்கு அவர்களை அழைத்துச் செல்வார்கள்.

அங்கு ஒரு ஐடி நிறுவனம் போல் இருக்கும் கட்டிடங்களில் அவர்களை அடைத்து வைத்து, நம் நாட்டு மக்களை ஆன்லைன் கால் மூலம் அழைத்து, போலியான ஸ்டாக் மார்க்கெட், க்ரிப்டோ கரன்சி போன்றவைகளில் முதலீடு செய்யச் சொல்லி அந்த ஆன்லைன் மோசடி கும்பல் வலியுறுத்தும்.

இதற்கு ஒத்துழைக்க மறுப்பவர்களை அடிப்பது, பட்டினி போடுவது, மின்சாரம் தாக்கி வதைப்பது என்று பலவகைகளில் இந்த கும்பல் அவர்களைக் கொடுமைப் படுத்தும்.

இது குறித்து சென்ற மாதம் மின்னம்பலத்தில் பணத்துக்கு மயங்கும் இந்தியர்கள்…. மாயம் செய்யும் சீனர்கள்… என்ன செய்யப் போகிறது மோடியின் டிஜிட்டல் இந்தியா? என்ற தலைப்பில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த வருடம் ஜனவரி முதல் ஜூன் வரை ரூ.11,269 கோடி இந்தியர்களிடமிருந்து இப்படிப்பட்ட ஆன்லைன் பண மோசடி கும்பல் பறித்துள்ளதாக இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதைத் தடுப்பதற்காக ஏ.ஐ.தொழில்நுட்பம் மூலம் இதுபோன்ற ஆன்லைன் கால்களை தடுக்கும் நடவடிக்கைகளில் சைபர் க்ரைம் போலீஸார் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள மாநில சைபர் குற்றத்தடுப்பு பிரிவு தலைமையகம் சார்பில், பணமோசடி செய்வதற்காக லாவோஸ், கம்போடியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் மொபைல் போன் அழைப்புகளை தடுக்கும் முயற்சி நடந்துவருகிறது.

இது தொடர்பாக அத்தலைமையகத்தின் கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் கூறுகையில் “ஆன்லைன் வாயிலாக பணமோசடியில் ஈடுபட்டவர்கள் மற்றும் மோசடிக்கு முயற்சி செய்தவர்களின் மொபைல் போன் எண்கள் எங்களிடம் உள்ளன.

மற்ற மாநிலங்களில், மோசடி செய்த நபர்களின் விபரங்களையும் சேகரித்து வைத்துள்ளோம். அவர்களில், லாவோஸ், கம்போடியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பேசியவர்களின் மொபைல் போன் எண்களும் உள்ளன.

அவற்றை எல்லாம், மத்திய தொலைத் தொடர்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளோம். அவர்கள் கம்போடியா, லாவோஸ், உள்ளிட்ட நாடுகளிலிருந்து பணமோசடிக்கு முயற்சி செய்து, தமிழகத்திற்கு வந்த 1.50 கோடி மொபைல் போன் அழைப்புகளை, ஏ,ஐ. தொழில்நுட்பம் வாயிலாக, 15 நாட்களில் தடுத்து நிறுத்தி உள்ளனர். மேலும் அழைப்பு வந்த சிம்கார்டுகள் யாருடையது என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.” என்றார்.

இதற்கிடையில் இந்த மாதம் ஆரம்பத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல இளைஞர்கள் கூட்டமாக வெளிநாட்டிற்குச் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.

அவர்களை, எஸ்.பி. முத்தரசி தலைமையிலான தமிழ்நாடு சிபி-சிஐடி போலீஸ் குழுவினர் விசாரித்துள்ளனர். இந்த குழு ஆன்லைன் பண மோசடி செய்வதற்காக வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லப்படும் இளைஞர்களை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு குழுவாகும்.

விசாரணையில், அந்த இளைஞர்கள் லாவோஸ், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் முன்பு பண மோசடி கும்பலிடம் சிக்கி, மீட்கப்பட்டவர்கள் என்றும், அவர்கள் மீண்டும் அங்குச் செல்ல இருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

இதற்கு போலீஸார் மீண்டும் அங்குச் சென்று ஏமாற வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

அதற்கு அவர்கள் “எங்களைப் பண மோசடியில் ஈடுபடுத்திய கும்பல் எங்களுக்குத் தர வேண்டிய சம்பளம் பாக்கியிருக்கிறது, அதை வாங்கத்தான் நாங்கள் செல்கிறோம்” என்று பதிலளித்துள்ளனர்.

இதனை அடுத்து, அவர்களுக்கு அறிவுரை கூறி போலீஸார் தடுக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்களைத் சிபி-சிஐடி குழுவால் தடுக்க முடியவில்லை.

ஆன்லைன் மோசடி கால்களை ஏ.ஐ.மூலம் தடுத்தாலும். இம்மாதிரி இளைஞர்கள் மீண்டும்  மீண்டும் அங்குச் சென்றால், மோசடிகள் தொடர்ந்து அதிகரிக்கத் தான் செய்யும். இதற்கு அரசாங்கம் என்ன விதமான நடவடிக்கை எடுக்கும் என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அப்துல் ரஹ்மான் & வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

நடித்தது ஒரே படம்தான்… யார் இந்த ‘பதர் பதாஞ்சலி’ துர்கா?

அடேங்கப்பா தங்கம் ரேட் இவ்வளவு உயர்ந்திருச்சா?

இந்திரா காந்தி பிறந்தநாள்… கார்கே, ராகுல் மரியாதை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel