ஸ்டாலின் பயணம்- ரூட் மாற்றம்? பதற்றத்தில் அதிகாரிகள்! 

தமிழகம்

பருவ மழை கடுமையாக பெய்து வருவதால் கடலூர் மற்றும் நாகை மாவட்டங்கள் பெரும் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளன. இதை  நாளை (நவம்பர் 14)  முதல்வர் ஸ்டாலின் பார்வையிட வருவதால் எந்த வழியில் முதல்வரை அழைத்து செல்வது என்று பதற்றத்தில் இருந்து வருகிறார்கள் அதிகாரிகள்.

நவம்பர் 12,13 இரண்டு நாட்கள் பெய்த கன மழையால் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் சாலைகளிலும் வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது, இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது, சீர்காழி, கும்பகோணம் பகுதியில் மின்சாரம் தடைபட்டுப்  போனது.

கடலூர் மாநகரப் பகுதியில் பல வீதிகளிலும் வீடுகளிலும் தண்ணீர் புகுந்ததை 13ஆம் தேதி இரவு வரையில் வெளியேற்ற முடியாமல் போராடி வருகின்றனர் மக்கள்.

திமுக மேயர் சுந்தரி வெற்றிபெற்ற 20 வது வார்டில்,  “நபிகள் நாயகம் வீதியில்  வீடுகளில் தண்ணீர் புகுந்ததை வெளியேற்ற, மேயர் மற்றும் அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு தகவல் சொல்லியும் பலன் இல்லாமல் நாங்களே மோட்டார் பம்பு வைத்து போராடி வருகிறோம்” என்றார்கள் அப்துல் முகமதும், இப்ராஹீமும்.

இந்த நிலையில்  கடலூரில் இருந்து   ஆலப்பாக்கம் புதுச்சத்திரம் வழியாக சிதம்பரம்  செல்லும் சாலையில் டபுள் ரோடு அதாவது இரட்டைச் சாலை அமைக்கும் பணிகள் அண்மைக் காலமாக நடைபெற்று வருகின்றன.  இதனால்  பாதி மண் சாலை, பாதி தார் சாலை என்ற நிலையில்  பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

கடலூர் முது நகர் பச்சாங்குப்பத்திலிருந்து சிப்காட் பகுதியான குடிகாடு வரையில் நாளை முதல்வர் பயணிக்கும் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து  ஓடுகிறது, அதை அப்புறப்படுத்த போராடி வருகின்றனர் அதிகாரிகள்.

இப்படி பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 13) மாலை  சென்னையிலிருந்து புறப்பட்டவர் திண்டிவனம் வழியாக புதுச்சேரி வந்து திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் ஹோட்டலான அக்கார்டு ஹோட்டலில்  இரவு  தங்குகிறார்.

நவம்பர் 14 ஆம் தேதி காலையில்  9 மணிக்கு புறப்பட்டு கடலூர் வழியாக கீழ் பூவானிக்குப்பம் மாவட்டம் முடிவில் வல்லம் படுகையில் பார்வையிட்டு விட்டு சீர்காழி செல்ல ரூட் போட்டுள்ளார்கள் கலெக்டர் பாலசுப்பிரமணியன், எஸ். பி சக்திகணேசன், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர்.

ரூட்டை பார்த்த காவல்துறை அதிகாரிகள்,  “முதல்வர் கான்வாய் ரூட்டில் தண்ணீர் அதிகமாக நிற்கிறது.  இரவு மழை பெய்தால்  இன்னும் அதிகமாக தண்ணீர் ஓடும்.  சாலை வேலைகளும் நடைபெற்று வருகிறது.

அதனால் குறிஞ்சிப்பாடி- புவனகிரி வழியாக போகலாம்.   இல்லையென்றால்  குறிஞ்சிப்பாடி- வடலூர் -சேத்தியாத்தோப்பு கூட்டு ரோடு வழியாக போகலாம்”  என்று யோசனை தெரிவிக்க இதுபற்றி இப்போது  ஆலோசனைகள் செய்து வருகின்றனர் காவல்துறையினர்.

வணங்காமுடி

உலகக் கோப்பை கால்பந்து: போர்ச்சுகல் வீரர்கள் அறிவிப்பு!

மயிலாடுதுறை மாவட்டம்: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *