வீட்டுக்கு ஒரு கொடி:  திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்!

தமிழகம்

வீட்டுக்கு ஒரு கொடி:  திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்! 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று வீடுகளில் கொடியேற்ற பொதுமக்கள் அதிக ஆர்வம்காட்டி வருவதால் திருப்பூரில் தேசிய கொடிகள் தயாரிக்க ஆர்டர்கள் குவிந்து வருகிறது. இந்த ஆண்டு அதிக அளவிலான ஆர்டர்கள் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் வந்துள்ளன.


சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி நாடு முழுவதும் சிறப்புக் கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தேசிய கொடியேற்றி நாட்டு மக்களின் இணைப்பை மேலும் வலுவாக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதையடுத்து பல்வேறு மாநிலங்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. வீடுகள்தோறும் தேசிய கொடிகள் ஏற்றப்பட உள்ளதால் அதிக அளவு தேசிய கொடிகள் தேவைப்படுகிறது. இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தேசிய கொடிகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை திருப்பூரில் உள்ள கொடி உற்பத்தியாளர்களிடம் தேசிய கொடிகள் தயாரிப்பதற்கான ஆர்டர்கள் குவிந்தவண்ணம் உள்ளன. இதுகுறித்து பேசியுள்ள கொடி உற்பத்தியாளர்கள், “தற்போது 75ஆவது ஆண்டு சுதந்திர தினம் என்பதால் அரசு சார்பில் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற அனுமதியும், வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு தேசிய கொடி தயாரிப்புக்கான ஆர்டர்கள் அதிகம் பெறப்பட்டுள்ளது.


தமிழகத்தைப் பொறுத்தவரை திருப்பூரில் உள்ள சில நிறுவனங்கள் கொடிகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. வீடுகளில் ஏற்றக்கூடிய தேசிய கொடி 20 X 30 என்ற அளவில் தயாரித்து வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பிவைத்து வருகிறோம். கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் ஏற்றுவதற்கு 30 X 40 அளவிலான கொடிகள் தயாரிக்கப்படுகின்றன.
மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளதால் தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், சமூக ஆர்வலர்கள், வியாபாரிகள் ஆகியோரிடமிருந்து அதிக அளவிலான ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், போதிய நேரம் இல்லாததால் ஆர்டர்கள் எடுக்க முடியவில்லை. தற்போது எடுத்துள்ள ஆர்டர்களையே குறிப்பிட்ட நேரத்தில் முடித்து கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு பகலாக கொடி தயாரிப்பு பணி நடந்து வருகிறது.


20 X 30 பாலியஸ்டர் வகையிலான தேசிய கொடிகள் 30 ரூபாய்க்கும், காட்டன் துணியால் ஆன தேசிய கொடிகள் 60  ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 30 X 40 அளவு பாலியஸ்டர் துணியால் ஆன கொடிகள் 50  ரூபாய்க்கும், காட்டன் துணியால் ஆன கொடிகள் 85  ரூபாய்க்கு ம் விற்பனை செய்யப்படுகிறது. திருப்பூரில் உள்ள நிறுவனங்கள் மூலம் இதுவரை 20 லட்சம் தேசிய கொடிகள் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 10ஆம் தேதிக்குள் மேலும் பல லட்சம் கொடிகள் தயாரித்து அனுப்ப உள்ளோம். வட மாநிலங்களில் இருந்து காகிதம் மூலம் தயாரிக்கப்பட்ட தேசிய கொடிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. இருப்பினும் காட்டன் துணி கொடிகள் உற்பத்தி திருப்பூரில் மட்டுமே தயாராகிறது. தற்போதைய விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் 15 சதவிகிதம் வரை தேசிய கொடியின் விலை உயர்ந்துள்ளது. கடந்த  இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் தேசிய கொடிகள் விற்பனை பாதிக்கப்பட்டது. ஆர்டர்களும் குறைவாகவே வந்தது.


இந்த ஆண்டு அதிக ஆர்டர்கள் வந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேசிய கொடிகளைப் பொறுத்தவரை கிழிந்திருக்க கூடாது, நிறம் மங்கியிருக்க கூடாது என்பது போன்ற விதிமுறைகள் உள்ளன. மேலும் மத்திய அரசின் வேண்டுகோளால் இந்த ஆண்டு பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் புதிய கொடிகளை பயன்படுத்த உள்ளனர். இதனால் முன் எப்போதும் இல்லாத வகையில் ஆர்டர்கள் வந்துள்ளது” என்று கூறியுள்ளனர்.
கொடிக்கம்பங்களில் ஏற்றப்படும் காதி கொடிகள் விற்பனை ஒருபுறம் உள்ள நிலையில், தனிநபர்கள் தங்கள் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களிலும், சட்டையிலும் அணிந்து பயன்படுத்தும் வகையிலான சிறிய அளவிலான தேசிய கொடிகள் விற்பனையும் தற்போது தொடங்கியுள்ளது. திருப்பூர் நகரப் பகுதியில் உள்ள கடைகளில் தற்போது இவற்றின் விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது. மோட்டார் சைக்கிளில் முன்புறம் முகப்பு விளக்குக்கு மேற்பகுதியில் ஒட்டும் வகையிலான ஸ்டிக்கர் கொடி, கார்களின் முன்புறம் பேனட் மீது கட்டும் சிறிய அளவிலான துணி மற்றும் காகித கொடிகள் விற்பனைக்கு வந்துள்ளன.


வட்ட, செவ்வக வடிவிலான சட்டையில் குத்தும் வகையிலான தேசிய கொடிகளும் விற்பனையாகின்றன. பலர் மொத்தமாக வாங்கி செல்கின்றனர். கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கடைகளில் தேசிய கொடிகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. இதேபோல் தமிழகம் முழுவதும் தேசிய கொடிகளை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம்காட்டி வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

வீட்டுக்கு ஒரு கொடி:  திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்! இந்த நிலையில், சிவகாசியில் உள்ள நிறுவனங்களில் கதர், காகிதம், பிளாஸ்டிக், காகித அட்டை, ஸ்டிக்கர் என 30 வகையான வடிவத்தில் தேசிய கொடிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 75ஆம் ஆண்டு சுதந்திர தினம் என்பதால் இந்த ஆண்டு அதிக அளவிலான ஆர்டர்கள் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ளன. அவற்றை தயாரித்து அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

– ராஜ்

ஸ்டாலினைப் பாராட்டித் தள்ளிய விஜயகாந்த்: ஏன்?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *