கிச்சன் கீர்த்தனா : தினை – பச்சைப்பயறு ஊத்தப்பம்

தமிழகம்

நம் நாட்டின் சிறுதானியங்களில் மிகவும் பழைமையானது தினை. கிட்டத்தட்ட 10,000 ஆண்டுகளாக கிழக்கு ஆசியாவில் பயிரிடப்பட்டு வந்த தானியம். இதன் உற்பத்தியில் இந்தியாவுக்கே முதல் இடம்.

புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, பாஸ்பரஸ், மாவுச்சத்து, சுண்ணாம்புச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துகளைக் கொண்டது. இதயத்தைப் பலப்படுத்தவும், கண்பார்வை சிறப்பாக இருக்கவும் உறுதுணையாக இருக்கும்.

குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தினையைக் கூழாக்கித் தருவார்கள்; அது, தாய்ப்பால் நன்கு சுரக்க உதவும். இது கபம் தொடர்பான நோய்களை நீக்கும். வாயுத்தொல்லையை விரட்டும்.

தினையில் இட்லி, அல்வா, காரப் பணியாரம், பாயசம், அதிரசம் ஆகியவற்றைச் செய்து சாப்பிடுவதுபோல் பச்சைப்பயறு சேர்த்து சுவையான ஊத்தப்பமும் செய்து ருசிக்கலாம்.

என்ன தேவை?

தினை அரிசி – அரை கப்
முளைவிட்ட பச்சைப்பயறு – அரை கப்
காய்ந்த மிளகாய் – நான்கு
இஞ்சி – அரை அங்குலம் (நறுக்கியது)
பெருங்காயம் – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – 2 ஈர்க்கு (நறுக்கியது)
வெங்காயம் – 2 (நறுக்கியது)
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
துருவிய கேரட் – அரை கப்

எப்படிச் செய்வது?

தினையை 2 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும். முளைகட்டியப் பச்சைப்பயறைத் தினை அரிசியுடன் இஞ்சி, மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்துத் தண்ணீர்விட்டு இட்லி மாவுப் பதத்துக்குக் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.

அதில் வெங்காயம், கேரட், கறிவேப்பிலை சேர்த்துக் கலந்துகொள்ளவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவை வார்க்கவும். தேய்க்காமல் அப்படியே மூடி வைத்து வேகவிட்டு இருபுறமும் எண்ணெய்விட்டுத் திருப்பிப்போட்டு இட்லிப் பொடி தூவி எடுத்து, காரமான தக்காளி – வெங்காயச் சட்னியுடன் பரிமாறவும்.

சைட்டிஷ் சேர்க்காமல் சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.

வரகு – அன்னாசிப்பழக் குழைச்சல்

கிச்சன் கீர்த்தனா : சோளம் – ஜவ்வரிசி மசாலா புலாவ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *