வேளாங்கண்ணி திருவிழா: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்!
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (ஆகஸ்ட் 29) மாலை சிறப்பாகத் தொடங்கவுள்ளது.
வேளாங்கண்ணியில் ஆண்டுதோறும் நடைபெறும் புனிதா ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழா தொடங்கவுள்ளதால் பல்வேறு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இன்று(ஆகஸ்ட் 29) மாலை 5.45 மணிக்குத் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், மாதாவின் உருவம் வரையப்பட்ட கொடியைப் புனிதம் செய்து வைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, புனிதம் செய்யப்பட்ட கொடி ஊர்வலமாக எடுத்து வந்து கொடியேற்றிய பிறகு ஆயர் தலைமையில் திருப்பலி நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்ப்பவனி வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
பாதுகாப்புப் பணிகள்
கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா பரவல் காரணமாக வேளாங்கண்ணி ஆலய திருவிழா மக்கள் வருகையின்றி நடைபெற்றது.
இதனால் இந்த ஆண்டு 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் திருவிழாவில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜகவர் தலைமையில், 16 துணை கண்காணிப்பாளர்கள், 110 ஆய்வாளர்கள் உட்பட 2 ஆயிரம் போலீசார் மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர், 200 ஊர் காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
27 கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் 4 டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
சுகாதாரத் துறையின் சார்பில் 10 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவப்பணியில் 25 மருத்துவர்கள் உட்பட 158 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சிறப்புப் பேருந்துகள்
வேளாங்கண்ணியில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் நவம்பர் 11 ஆம் தேதி வரை 750 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று ஏற்கனவே தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மக்கள் வருகை
வேளாங்கண்ணி மாதா கோவில் வண்ண விலக்குகள் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.
இன்று மாலை திருவிழா தொடங்கவுள்ள நிலையில் காலை முதலே வேளாங்கண்ணியில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
மோனிஷா
வேளாங்கண்ணி திருவிழா: 750 சிறப்பு பேருந்துகள் இயக்கம்