வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களைப் பதிவு செய்வது அவசியம்!

Published On:

| By Jegadeesh

வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை முழுமையாக பதிவு செய்து பணியமர்த்த வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தொழில்துறையினருக்கு அறிவுறுத்தினார்.

குழந்தை தொழிலாளர் முறை திருத்தம் சட்டம், கொத்தடிமை தொழிலாளர் முறை தடுத்தல் சட்டம், ஆள் கடத்தல் தடுப்பு சட்டம், சிறார் நீதிச் சட்டம் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களைப் பணியமர்த்தும் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று (ஆகஸ்ட் 23) நடைபெற்றது.

திருப்பூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது, குழந்தை தொழிலாளர் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும், வெளிமாநில தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் குறித்தும் மற்றும் அவர்களை பணியமர்த்தும்போது தொழில் துறையினர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் தெரிவித்தார்.

“தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்களையும், கொத்தடிமை தொழிலாளர்களையும் அறவே பணியமர்த்தக் கூடாது. வெளிமாநில தொழிலாளர்களை பணியமர்த்தும்போது அவர்களை பற்றிய முழு விவரங்களையும் சேகரித்து பதிவு செய்ய வேண்டும். தொழிலாளர்கள் பற்றிய பதிவேடுகள், ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும். வெளிமாநில தொழிலாளர் பற்றிய விவரங்களை காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்” என்றார்.

குழந்தை தொழிலாளர் முறை நீக்குதல் மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துதல் மற்றும் முறைப்படுத்துதல் குறித்து திருப்பூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குநர் புகழேந்தி விளக்கி கூறினார். கொத்தடிமை தொழிலாளர் முறை அகற்றுவது குறித்து உடுமலை தொழிலாளர் உதவி ஆய்வாளர் பேச்சிமுத்து பேசினார். ஆட்கடத்தல் தடுத்தல் மற்றும் சிறார் நீதி சட்டம் குறித்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக ஆய்வாளர் ஹேமலதா விளக்கமளித்தார்.

ராஜ்

வேலைவாய்ப்பு : UIIC-வில் பணி!

அதிமுக மாநாடு: சுங்கச்சாவடிக்கு ரூ.20 கோடி இழப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel