விசாரணைக்கு சசிகலா ஒத்துழைத்தாரா?: நீதிபதி ஆறுமுகசாமி விளக்கம்!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி, சசிகலாவை நேரில் அழைத்து விசாரிக்காதது ஏன்? என்று விளக்கம் அளித்துள்ளார்.

ஆறுமுகசாமி ஆணையம்

முன்னாள் முதலமைச்சர் ஜெலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.

2017ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த ஆணையத்திற்கு 14 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. ஜெயலலிதா உடன் இருந்தவர்கள், உறவினர்கள், முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவர்கள், சிகிச்சையளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் என 158 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

608 பக்க அறிக்கை

தனது விசாரணையை முழுமையாக முடித்த நீதிபதி ஆறுமுகசாமி இன்று (ஆகஸ்ட் 27) முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

ஆங்கிலத்தில் 500 பக்கங்களும் தமிழில் 608 பக்கங்களும் கொண்ட அறிக்கையை நீதிபதி ஆறுமுகசாமி, முதலமைச்சரிடம் வழங்கினார்.

அதன்பிறகு எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நீதிபதி ஆறுமுகசாமி, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் மட்டுமல்லாது அதற்கு முன்பும் இருந்த நிலை விசாரிக்கப்பட்டுள்ளது.

கால தாமதம் இல்லை

இதுவரை 150 க்கும் மேற்பட்டோரிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் கால தாமதம் எதுவும் நான் செய்யவில்லை என்று கூறினார். அப்போது, சசிகலாவை நேரில் அழைத்து ஏன் விசாரிக்கவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், சசிகலாவை ஆஜராகும்படி சம்மன் அனுப்பினோம். ஆனால் அவர் மறுத்துவிட்டார். சாட்சியை கட்டாயப்படுத்துவது ஏற்புடையதல்ல என்றும் சசிகலாவிடம் பிரமாணப் பத்திரம் மூலம் தனக்கு தேவையானவற்றை எழுதி வாங்கிக்கொண்டதாகவும் விசாரணைக்கு சசிகலா தரப்பு முழு ஒத்துழைப்பு கொடுத்தாகவும் கூறினார்.

அறிக்கையை மாற்றினேன்

மேலும் போயஸ் கார்டனில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதில் எவ்வித சந்தேகமும் இல்லாததால் அங்கு சென்று எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்தார்.

ஓ.பி.எஸ் வாக்குமூலம் உதவியாக அறிக்கைக்கு இருந்தது என்றும் எய்ம்ஸ் அறிக்கை வெளியான பிறகு தான்  நிறைய புதிய யோசனைகள் தோன்றியது.

அதை வைத்து அறிக்கையை மீண்டும் மாற்றியமைத்தேன் என்று நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.

அரசு தான் முடிவு செய்யவேண்டும்

தமிழகத்தில் எத்தனையோ ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ள போதும், என்னுடைய ஆணையத்திற்கு மட்டும் ஏன் அதிகப்பணம் செலவிடப்பட்டதாக விமர்சனம் வந்தது என்று கேட்ட நீதிபதி ஆறுமுகசாமி இந்த ஆணையத்தை நிறுத்தவேண்டும் என்று எண்ணம் கொண்டவர்களே இதுபோன்ற விமர்சனத்தை முன்வைத்தார்கள் என்றார்.

மேலும் 608 பக்க அறிக்கையில் என்னுடைய தனிப்பட்ட கருத்தை அதிகமாக பதிவு செய்யவில்லை, சாட்சியங்களிடம் கிடைத்த முக்கியமான தகவல்கள் அனைத்தையும் அறிக்கையில் தெரிவித்துள்ளேன் இதுபற்றி அரசுதான் முடிவு செய்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி அளித்துள்ள அறிக்கை வரும் 29-ம் தேதி நடைபெற உள்ள அமைச்சரவைக்கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கலை.ரா

அமைச்சரவைக் கூட்டத்தில் ஜெ.மரண விசாரணை அறிக்கை!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts