பெரியார் பல்கலை வினாத்தாள்! சாதி வன்மத்தை காட்டுகிறது! – டாக்டர் ராமதாஸ்

தமிழகம்

செமஸ்டர் தேர்வில் சாதிரீதியாக வினாத்தாள் வெளியான சர்ச்சையில், பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளிட்ட அனைவர் மீதும் விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும்” என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் எம்ஏ வரலாறு பாடத்தின் இரண்டாவது செமஸ்டர் தேர்வுக்கான கேள்வித்தாளில், மஹர், நாடார், ஈழவர், ஹரிஜன் என சாதிப் பிரிவுகளைக் குறிப்பிட்டு ‘தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது?’ என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், இதுகுறித்த விசாரணை நடத்த குழு அமைத்து தமிழக உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து இன்று (ஜூலை 15) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட முதுகலை வரலாறு இரண்டாம் பருவத் தேர்வில் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது? என்ற வினா எழுப்பப்பட்டு, அதற்கு மகர்கள், நாடார்கள், ஈழவர்கள், ஹரிஜன்கள் ஆகியவற்றிலிருந்து ஒன்றை தேர்வு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது .

தேர்வுகளில் மாணவர்களின் கற்றல் மற்றும் புரிந்துகொள்ளும் திறன்களை அறிய பல வழிமுறைகள் இருக்கும் நிலையில், இப்படி ஒரு வினா எழுப்பப்பட்டது தவறு. இது வினாத்தாள் தயாரித்தவர்கள் மற்றும் தேர்வு நடத்தியவர்களின் சாதிய வன்மத்தையே காட்டுகிறது. இது கண்டிக்கத்தக்கது. வினாத்தாள் வெளியிலிருந்து பெறப்பட்டதுதான் இந்த தவறுக்கு காரணம் என துணைவேந்தர் கூறுவது இந்த குற்றத்தை மூடி மறைக்கும் செயல். வினாத்தாளை பல்கலை. நிர்வாகம் சரிபார்த்திருக்க வேண்டும். அத்தகைய நடைமுறை பெரியார் பல்கலையில் இருக்கும் போது இந்த குற்றம் எப்படி நடந்தது. சாதிக் கொடுமைகளுக்கு எதிராக போராடிய பெரியார் பெயரில் உள்ள பல்கலையில் இக்கொடுமை நடந்திருப்பதை மன்னிக்க முடியாது. வினாத்தாள் தயாரித்தவர்கள், அதை சரிபார்க்கத் தவறியவர்கள், பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளிட்ட அனைவர் மீதும் விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும்” என அதில் பதிவிட்டுள்ளார்.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *