சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்ட சாதி ரீதியான கேள்வியால் சர்ச்சை எழுந்ததையடுத்து விசாரணை குழு அமைத்துள்ளது தமிழக அரசு.
சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் முதுகலை வரலாறு 2ஆம் ஆண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வு நேற்று (ஜூலை 14) நடைபெற்றது. அப்போது வழங்கப்பட்ட வினாத்தாளில் சாதி குறித்த சர்ச்சைக்குரிய கேள்வி இடம் பெற்றது. மஹர், நாடார், எழவா, ஹர்ஹன் என சாதி பிரிவுகளை குறிப்பிட்டு இதில் தமிழ்நாட்டில் எது தாழ்த்தப்பட்ட சாதி என கேள்வி கேட்கப்பட்டது. சர்ச்சைக்குரிய இந்த கேள்வி குறித்து சமூகவலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன. மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் வினாத்தாள் தொடர்பாக பல்கலைகழக நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து பெரியார் பல்கலைகழக துணை வேந்தர் ஜெகநாதன் விளக்கம் அளித்தார். அவர், “தேர்வுக்கான வினாத்தாள் சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தால் தயாரிக்கப்பட்டது இல்லை. பிற பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்களால் வினாத்தாள் தயார் செய்யப்பட்டது.வினாத்தாள் கசிந்துவிடக்கூடாது என்பதற்காக அதனை முன்கூட்டியே படித்து பார்க்கும் நடைமுறை பெரியார் பல்கலைக் கழகத்தில் கிடையாது. சர்ச்சைக்குரிய கேள்வி குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். மேலும் மறு தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்.” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், பெரியார் பல்கலைக் கழக வினாத்தாளில் சர்ச்சையான கேள்வி இடம் பெற்ற விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதுகுறித்த அறிக்கையில்,’சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் முதுகலை வரலாறு பாடப்பிரிவுக்கு நடத்தப்பட்ட பருவத் தேர்வில் சாதியை குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது குறித்து பல்வேறு ஊடகங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கேள்வி இடம்பெற்றது குறித்து உயர்கல்வித் துறை உயர் அலுவலர் நிலையில் குழு அமைக்கப்பட்டு உரிய விசாரணை மேற்கொண்டு அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை, துறை மூலமாக எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**கிறிஸ்டோபர் ஜெமா**