பெரம்பலூரில் 15 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டதற்கு கஞ்சா தான் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெரம்பலூர் நகராட்சி, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே உள்ள இந்திரா நகரைச் சேர்ந்தவர் கணேசன். இவருக்கு ஜூலி என்ற மனைவியும், ரோஹித் ராஜ் (14), பிரவீன்ராஜ் (12), பவுன்ராஜ் (6) ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.
கணேசன் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பூக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருடைய மூத்த மகனான ரோஹித் ராஜ் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். ஆனால் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு தந்தையுடன் பூக்கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் அந்த வேலையை விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று (மார்ச் 13) இரவு 7.30 மணிக்கு இந்திரா நகரில் இருந்து அங்காளம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையில் உள்ள சமுதாய கழிவறையில் இருந்து ரோஹித்ராஜ் உடலில் பலத்த காயங்களுடன் தலை தெறிக்க மெயின் ரோட்டுக்கு ஓடி வந்துள்ளார்.
ஆனால் சிறிது தூரம் ஓடிவந்த ரோஹித் ராஜ் கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதைக் கண்டு பதறிப்போன அக்கம்பக்கத்தினர் உடனடியாக பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலின் பேரில், பெரம்பலூர் உட்கோட்ட துணைபோலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி தலைமையில் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து ரோஹித்ராஜின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காகப் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாமளாதேவி வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
சிறுவன் அலறியடித்துக் கொண்டு வெளியே வந்த கழிவறைக்குள் மதுபாட்டில்கள் நொறுங்கியும், ரத்த கறைகளும் இருந்தன. மர்மநபர்கள் ரோஹித்ராஜை அழைத்துச்சென்று மது அருந்திவிட்டு, காலி பாட்டில்கள் உள்ளிட்டவைகளால் குத்திவிட்டு தப்பித்துச் சென்றிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
ரோஹித் கொலை செய்யப்பட்டதற்கு முன்விரோதம் காரணமாக இருக்குமோ என்றும் போலீசார் விசாரணை நடத்தினர். கொலை செய்து விட்டு தப்பியோடிய மர்மநபர்களைத் தேடி வருகின்றனர்.
சமீப காலமாகப் பெரம்பலூரில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் சிறுவன் கொலை செய்யப்பட்டது அப்பகுதி மக்களிடத்தில் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பெரம்பலூரில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொலை செய்தவர்கள் கஞ்சா போதையிலும் கொலை செய்திருக்கலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மோனிஷா
பிளஸ் டூ தேர்வு: இத்தனை பேர் எழுதவில்லையா?
ஆன்லைன் சூதாட்ட தடை – பேச அனுமதிக்கவில்லை : டி.ஆர்.பாலு