வெளிநாட்டிற்குச் சென்று பணியாற்றி பணியின்போது இறந்த குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்கள் குடும்பத்திலுள்ள அவர்தம் மகன் மற்றும் மகளுக்கு திருமண உதவித் தொகை மற்றும் கல்வி உதவித் தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு இன்று (ஆகஸ்ட் 22) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும், அவர்களுக்கு தமிழ்நாடுதான் தாய்வீடு. அவர்கள் மீது அன்பு செலுத்துவது மட்டுமல்ல, அரவணைப்பதும், பாதுகாப்பதும் தாய்த் தமிழ்நாட்டின் கடமையாகும்.
இப்படி பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழும் தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கவும், உதவிகளைச் செய்யவும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்கள் வெளிநாட்டிற்குச் சென்று பணியாற்றி பணியின் போது இறக்க நேரிட்டால் அவர்கள் குடும்பத்திலுள்ள அவர்தம் மகன் மற்றும் மகளுக்கு திருமண உதவித் தொகை மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள்.
இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் சார்பில் அயல்நாடுகளுக்கு பணியின் பொருட்டு சென்று அங்கு பணியின்போது இறந்த குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்களின் குடும்பத்திலுள்ள மகன் மற்றும் மகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிடும் வகையிலும், திருமணத்தின் பொருட்டு ஏற்படும் எதிர்பாராத கூடுதல் செலவினத்தால் அக்குடும்பத்தினர் கடனில் சிக்கித் தவிப்பதை தடுக்கும் பொருட்டும் திருமண உதவித் தொகையாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கல்வியில் சிறந்த எதிர்காலத்தினை உருவாக்கிடும் வகையிலும், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களின் விகிதத்தை கல்வியில் அவர்களின் ஆர்வத்தினை அதிகரிப்பதற்கும் அவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக 12 ஆயிரம் ரூபாய் வழங்கிடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேற்குறிப்பிட்ட திருமண உதவித் தொகை மற்றும் கல்வி உதவித் தொகை பெற அயலகத் தமிழர் நலவாரியத்தில் பதிவு செய்திருத்தல் வேண்டும். திருமண உதவித் தொகை பெற திருமணத்தின் போது மணமகனுக்கு 21வயதும், மணமகளுக்கு 18 வயதும் நிறைவடைந்திருக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். பழங்குடியினர் 5-ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் இரண்டு நபர்களுக்கு மட்டும் திருமண உதவித் தொகை வழங்கப்படும்.
கல்வி உதவித் தொகை பெற தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று அல்லது அயல்நாடுகளில் அதற்கு இணையான படிப்புகளில் தேர்ச்சி பெற்று 11-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பு சேர்க்கை பெற்ற மாணவர்கள், மருத்துவக் கல்லூரி படிப்பு / பொறியியல் படிப்பு / வேளாண்மை / பொறியியல் (Agri. / Engg.) மற்றும் டிப்ளமோ படிப்பு, அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மூலம் தொழிற்கல்வி படிப்புகள் பாலிடெக்னிக்குகள் (Polytechnic)/ தொழிற் பயிற்சி நிறுவனங்களில் சேர்க்கை (Admission) பெற்ற மாணவர்கள் மட்டுமே இக்கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
ஒரு குடும்பத்தில் இரண்டு மாணவர்களுக்கு மேல் உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது. மேற்படி உதவித் தொகைகள் வழங்குவது தொடர்பான விரிவான நடைமுறை அயலகத் தமிழர் நல வாரியத்தால் வகுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மோனிஷா
மாதம் ரூ.1000 பெறுவதற்கான தரவு : முதல்வர் கொடுத்த அப்டேட்!
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: அனைத்து கட்சிகளுக்கும் முதல்வர் அழைப்பு!