நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: குற்றவாளியான பெண் தாசில்தார்!

தமிழகம்

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத பெண் தாசில்தாரை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தாலுகா, கடலடி கிராமத்தில் பொதுப் பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி முருகன் என்பவர் 2017ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை அதே ஆண்டு டிசம்பர் மாதம் விசாரித்த உயர்நீதிமன்றம், ”12 வாரங்களில் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டிருந்தது. ஆனால், உயர்நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தாமல் இருந்துள்ளது.

இதையடுத்து, ”தமிழக அரசு உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என முருகன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு 2018ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வந்தநிலையில், 2022ம் ஆண்டு ஜூன் மாதம் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “நான்கு வாரங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்” என அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

பெண் தாசில்தார் குற்றவாளி

இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் பண்டாரி மற்றும் நீதிபதி பரத் சக்கரவர்த்தி அமர்வு முன்பு இன்று (ஆகஸ்ட் 3) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “நீதிமன்ற உத்தரவு 4 ஆண்டுகளுக்கு மேலாக அமல்படுத்தப்படாமல் இருப்பது என்பது நீதிமன்ற அவமதிப்பு செயல். உத்தரவை வேண்டுமென்றே அமல்படுத்தாத சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும்” என நீதிபதிகள் அறிவித்தனர்.

இதைத் தொடர்ந்து அரசுத் தரப்பில், ”இரண்டு நாட்களில் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என விளக்கம் அளிக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘கலசப்பாக்கம் தாலுகாவின் அப்போதைய பெண் தாசில்தாரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி” என அறிவித்தனர்.

மேலும், ”அவரது தண்டனை விவரத்தை அறிவிப்பதற்காக அவர் ஆகஸ்ட் 5ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்” எனவும் உத்தரவு பிறப்பித்தனர். மேலும் உயர்நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டு முதல் ஏராளமான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, இது ஆரம்பம்தான் எனவும் எச்சரித்தார்.

ஜெ.பிரகாஷ்

எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் வழக்கு : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.