தொடர் பண்டிகைகள்: அதிகரிக்கும் வெல்லம் உற்பத்தி!

தமிழகம்

அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் சேலம், தர்மபுரி மாவட்டங்களில் உள்ள வெல்லம் ஆலைகளில் வெல்லம் உற்பத்தியை வேகப்படுத்தியுள்ளனர்.

சேலத்தில் கரும்புச் சாற்றினால் தயாரிக்கப்படும் வெல்லத்துக்கு பொது மக்களிடையே அமோக வரவேற்பு இருந்து வருகிறது. தமிழகத்தில் சேலத்தில் கரும்பு சாகுபடி அதிகளவில் உள்ளது.

சேலம் மாவட்டத்தில் காமலாபுரம், ஓமலூர், நாலுகால்பாலம், வெள்ளாளப்பட்டி, கருப்பூர், தும்பல், டேனிஸ்பேட்டை, தேக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 130–க்கும் மேற்பட்ட வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் உள்ளன.

இதற்கு அடுத்தபடியாக தர்மபுரி, நாமக்கல் மாவட்டத்தில் அதிக ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் வெல்லம் தமிழகத்தின் பல இடங்களுக்கும் இந்தியாவில் பல மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

ஆடி மாதத்தையொட்டி வெல்லம் அதிகளவில் தேவைப்பட்டதால் கடந்த ஆறு மாதங்களில் ஜூன், ஜூலை வழக்கத்தைவிட வெல்லம் உற்பத்தியை அதிகப்படுத்தினர். உற்பத்தி செய்யப்பட்ட வெல்லம் அவ்வப்போது விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தது.

ஆடிப் பண்டிகையை தொடர்ந்து வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியும், செப்டம்பர் 26ஆம் தேதி நவராத்திரி விழா தொடங்கி, அக்டோபர் 4ஆம் தேதி ஆயுத பூஜை விழாவும் நடக்கிறது.

இதைத்தொடர்ந்து தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகை காலம் என்பதால் சேலம், தர்மபுரி மாவட்டங்களில் உள்ள வெல்லம் ஆலைகளில் வெல்லம் உற்பத்தியை வேகப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள சேலத்தைச் சேர்ந்த வெல்லம் உற்பத்தியாளர்கள், “சேலம் மாவட்டத்தில் கருப்பூர், ஓமலூர், தின்னப்பட்டி, தீவட்டிப்பட்டி, காமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் உள்ளன.

இந்த ஆலைகளில் தினசரி 50 முதல் 60 டன் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை செவ்வாய்பேட்டை மூலப்பிள்ளையார் கோயில் அருகேயுள்ள வெல்ல மண்டிக்கு ஏலத்துக்கு கொண்டு வருகின்றனர்.

இங்கு ஏலம் எடுக்க சேலம் மற்றும் தமிழகத்தில் பிற பகுதிகளில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வருகை தருகின்றனர்.

தொடர்ந்து அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் ஆலைகளில் வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை உற்பத்தியை வேகப்படுத்தியுள்ளோம்.

தற்போது நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 டன் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. மண்டியில் 30 டன் வெல்லம் விற்பனை செய்யப்படுகிறது.

இங்கு விற்பனைக்கு வரும் வெல்லம் 60 சதவிகிதம் பெங்களூருக்கும், மீதமுள்ள 40 சதவிகிதம் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.

30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் வெல்லம் ரூ.1250 முதல் 1350 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது” என்று உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.

-ராஜ்

`சேலத்தில் தினமும் 25 டன் மாம்பழங்கள்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *