தக்காளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் குறைந்த விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
ரூ. 10, ரூ.20க்கு விற்பனையாகி வந்த தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது 100 ரூபாயைத் தாண்டி விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் கோடை வெயிலும், கோடை மழையும்தான் என தக்காளி விவசாயிகள் கூறுகின்றனர். தக்காளி நாற்று விடும் போது அதிகமான கோடை வெப்பம் இருந்ததால் செடிகள் பாதிக்கப்பட்டதாகவும், தற்போது கோடை மழை பெய்ததால் பூக்கள் உதிர்ந்ததுடன், காய்களும் அழுகியதால் மகசூல் குறைந்துவிட்டது என்கின்றனர் தக்காளி வியாபாரிகள்.
கோயம்பேடு சந்தையில் இன்றைய நிலவரப்படி ரூ.85க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனை கடைகளில் ரூ.100க்கும் அதை தாண்டியும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தக்காளி விலையை குறைக்க வேண்டும் என்று இல்லத்தரசிகள் வலியுறுத்தி வந்த நிலையில், அமைச்சர் ஐ. பெரியசாமி விலை குறைவாக நியாய விலை கடைகளில் தக்காளி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “தமிழகத்தில் பருவமழை காரணமாகத் தக்காளியின் விலை வெளிச்சந்தையில் உயர்ந்துள்ளதைக் கட்டுப்படுத்தி, மக்களுக்கு மலிவு விலையில் தரமான தக்காளி கிடைக்க, பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளியைக் குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
2021 வடகிழக்கு பருவமழை காலத்தில், கூட்டுறவுத்துறை நடத்தி வரும் 65 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 27.11.2021 முதல் 30.12.2021 வரை 150 மெட்ரிக் டன் அளவிற்குத் தக்காளியும் இதர காய்கறிகள் 1,100 மெட்ரிக் டன் அளவிற்கும் ரூ.3 கோடி அளவுக்கு கொள்முதல் செய்யப்பட்டு தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.45 முதல் ரூ.55 வரை விற்பனை செய்யப்பட்டது.
தற்பொழுது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மழை பெய்து வருவதால் தக்காளியின் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. தக்காளி கிலோ ரூ.90 முதல் ரூ.120 வரை வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கூட்டுறவுத் துறை நடத்தி வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் முதல் கட்டமாக 4 மெட்ரிக் டன் அளவிற்குத் தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்பட்டது.
தக்காளியின் வெளிச்சந்தை விலை கட்டுப்படுத்தப்படும் வரை இந்த நடவடிக்கை இன்று முதல் அனைத்து மாவட்டங்களில் உள்ள கூட்டுறவுத்துறை நடத்தி வரும் 65 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் மேற்கொள்ளப்படும். தேவையின் அடிப்படையில் நியாய விலைக் கடைகள் மூலமாகவும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறியுள்ளார்.
-பிரியா