கவரைப்பேட்டை ரயில் விபத்து : மேலும் 10 பேருக்கு சம்மன்!

Published On:

| By christopher

Kavaripettai train accident: 10 more people summoned!

கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக விசாரணைக்கு இன்று (அக்டோபர் 14) 2 மதியம் மணிக்குள் ஆஜராகுமாறு மேலும் 10 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த 11ஆம் தேதி இரவு சென்னை பெரம்பூரில் இருந்து பிகார் மாநிலம் தர்பங்காவிற்கு புறப்பட்ட ‘பாக்மதி எஸ்பிரஸ்’ ரயில் (12578) இரவு 8.30 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்புறம் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் பயணிகள் ரயிலின் 2 ஏசி பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. மேலும் 4 ஏசி பெட்டிகள் தடம் புரண்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை. எனினும் படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக விபத்து பகுதியில் நடைபெற்று வந்த தடம்புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றும் பணிகளும், தண்டாவாளத்தை சீரமைக்கும் பணிகளும் நிறைவு பெற்றது. இதனையடுத்து கவரைப்பேட்டை பகுதியில் ரயில்கள் இன்று முதல் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே விபத்து தொடர்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவானது விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த விபத்தில் பல்வேறு சந்தேகங்கள் நிலவும் நிலையில், கவரப்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டர், லோகோ பைலட், உதவி லோகோ பைலட் ஆகியோர் உள்ளிட்ட 13 அதிகாரிகள் தெற்கு ரயில்வே அலுவலகத்தில் கடந்த 12ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் சிக்னல், என்ஜினியர் துறையைச் சேர்ந்த 10 பேருக்கு இன்று மதியம் 2 மணிக்குள் ஆஜராகுமாறு கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

விபத்துக்குள்ளான ரயிலில் போல்ட், நட்டு கழற்றப்பட்டுள்ளதால் எழுந்துள்ள சந்தேகம் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

சென்னைக்கு கனமழை: 15 மண்டலங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!

ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel