“என் பேர் சொல்லும் பிள்ளைகளாக இருக்கவேண்டும்” : மாணவிகள் மத்தியில் ஸ்டாலின் பேச்சு!

Published On:

| By Kavi

கல்விச் செலவுக்கு கணக்கு பார்க்க மாட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடியில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 75,028 மாணவியர்க்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கிடும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கப் பணிகளை இன்று (டிசம்பர் 30) தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் நேரடியாகவும், காணொளி காட்சி வாயிலாகவும் 657 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “இத்தனை ஆயிரம் மாணவிகளைப் பார்க்கும்போது, ஒரு Dravidian Stock-ஆக நான் பெருமைப்படுகிறேன்.
இதற்கு நேரெதிராக இன்னொரு Stock இருக்கிறது. நம்மை சாதி, மதம்-என்று சொல்லி, பிரிக்க நினைக்கும் Stock! வளர்ச்சியைப் பற்றி யோசிக்காமல், வன்முறை எண்ணத்தை தூண்டி விடும் வன்மம் பிடித்த Stock!

பெண்கள் என்றால் வீட்டில்தான் இருக்க வேண்டும். கடைசிவரை ஒருவரை சார்ந்து இருக்க வேண்டும் என்று மனுவாத சிந்தனையை இந்தக் காலத்திலும் பேசிக்கொண்டு திரியும் Expiry-ஆன Stock இது!

அப்படிப்பட்டவர்களிடம் இருந்து தப்பித்து, இன்றைக்கு தமிழ்நாட்டு பெண்கள் இந்தியாவிலேயே Top-ஆக இருக்கிறீர்கள். மதிப்பெண் பெறுவதில் தமிழ்நாட்டுப் பெண்கள் டாப்! நாட்டிலேயே உயர்கல்வியில் அதிகமாக சேருவதிலும், நீங்கள்தான் டாப்! அப்படி உயர்கல்வியை முடித்து வேலைகளுக்கு செல்வதிலும் இந்தியாவிலேயே நம்முடைய தமிழ்நாட்டுப் பெண்கள்தான் டாப்! இந்தக் காட்சிதான், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் காண நினைத்த காட்சி!

ஒவ்வொரு குடும்பத்தில் இருக்கும் பெண்களும் கல்லூரியில் படித்து நல்ல வேலையில் சேர்ந்து யாரையும் எதிர்பார்க்காமல் தங்களின் சொந்த பொருளாதார வளத்தோடு இருக்க வேண்டும் என்று கருதியவர் பெரியார். அது அவரின் கனவு.

மூடப்பட்டிருந்த கல்விக் கதவுகள் திறக்கப்பட்டு, நாம் எல்லாம் கல்விச் சாலைகளுக்கு வரத் தொடங்கியபோது. தந்தை பெரியார் என்ன சொன்னார் தெரியுமா? “பெருந்தலைவர் காமராசர் கல்விக் கண்ணைத் திறந்தார். கலைஞர் அவர்களது ஆட்சி. எழுந்து நடக்க வைக்க வேண்டும்”-என்று சொன்னார்.

இன்றைக்கு கல்வியைப் பொறுத்தவரை பெண்கள்தான் முன்னிலையில் இருக்கிறார்கள். ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஏன். 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலைமையா இருந்தது?

சமூகரீதியாக, பாலினரீதியாக படிப்புக்கு தடைக்கற்கள் இருந்தது. 1911-ஆம் ஆண்டு எழுத்தறிவு பெறாதவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 94 விழுக்காடு. 1921-இல் 92 விழுக்காடு!

இந்தியப் பெண்களில் நூறு பேரில் இரண்டு பேருக்கு மட்டும்தான் அன்றைய காலத்தில் எழுத, படிக்கத் தெரியும். பள்ளிகளும், கல்லூரிகளும் இந்தளவுக்கு இல்லை! பெண்களைப் படிக்க வைத்தால் பண்பாட்டை இழந்து விடுவார்கள் என்ற மூடத்தனமும் பிற்போக்குத்தனங்களும் கோலோச்சிய காலம் அது.

அதை மாற்றி படித்தால் அறிவு வரும். தன்னம்பிக்கை வரும் என்று புரிய வைத்து. கல்விக்கனவை எல்லோருக்கும் திறந்துவிட்ட ஆட்சி நீதிக்கட்சி ஆட்சி! 9.3.1923 அன்று ஒரு அரசாணையை வெளியிட்டு, அதன்படி அனைத்து மக்களுக்கும் கட்டாயக் கல்வியை வழங்க வேண்டும் என்று சட்டம் ஆக்கியது நீதிக்கட்சி அரசு.

இந்தியத் துணைக் கண்டத்தில் நீதிக்கட்சி ஆட்சிதான் முதன்முதலாக அனைவருக்கும் கல்வி என்பதை சட்டமாக்கியது. பட்டியலின மாணவர்களைக் கட்டாயமாக எல்லாப் பள்ளிகளிலும் சேர்க்க வேண்டும். மறுக்கும் பள்ளிகளுக்கு அரசு வழங்கும் நிதி வழங்கப்படாது என்று சட்டம் இயற்றப்பட்டது.

இதையெல்லாம் நான் ஏன் சொல்கிறேன் என்றால் வந்த பாதையை மறக்காமல் இருந்தால்தான் வழிதவறிவிடாமல் முன்னேறிப் போக முடியும்! இதெல்லாம் தெரியாமல் இருப்பதால்தான், என்ன செய்தது திராவிடம் என்று சிலர் சொல்கிறார்கள் அவர்களுக்காகத்தான் இதை சொல்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர், “மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம் ஆகியவற்றின் வரிசையில்தான் புதுமைப் பெண் திட்டத்தையும் உருவாக்கினேன். இது 2021 தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்படாத திட்டம்!

பெரும் அளவில் தொடர்ந்து நிதி ஒதுக்க வேண்டிய, தேவையுள்ள திட்டம்! ஆனாலும் இதைத் தொடங்கியாக வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். ஏன் தெரியுமா? தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் உயர்க்கல்வி சேர்க்கை குறைவாக இருப்பதாக புள்ளி விவரங்களைப் பார்த்தேன்.

மேல்படிப்பு படிக்க திறமையும், மனசும் இருந்தாலும் பணம் இல்லாததால் படிப்பை கைவிடுகிறார்கள் என்று தெரிந்துக்கொண்டு வருத்தமடைந்தேன். அப்போதுதான், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் எனும் புதுமைப்பெண் திட்டத்தை நான் உருவாக்கினேன்.

இதனால், அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் அவர்கள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுவருகிறது.

முதற்கட்டமாக, 5.9.2022-இல் வடசென்னை பாரதி மகளிர் கல்லூரியிலும், இரண்டாம் கட்டமாக 8.2.2023-இல் திருவள்ளூர் பட்டாபிராமில் இருக்கும் இந்து கல்லூரியிலும் துவக்கி வைத்தேன்.

புதுமைப் பெண் திட்டம் தொடங்கிய காலத்திலிருந்து. தற்போது வரை கலை, அறிவியல், பொறியியல், தொழிற்படிப்பு, மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் உட்பட சுமார் 4 லட்சத்து 25 ஆயிரம் மாணவிகள் பயனடைந்திருக்கிறார்கள்.

இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது முதல், மாணவிகளுக்கு ஊக்கத்தொகையாக 590 கோடியே 66 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.இதை அரசுக்கு செலவினமாக கருதாமல், ஒரு தந்தைக்குரிய கடமையாக, பெண் குழந்தைகளுடைய கல்விக்கான மூலதனமாக தான் நான் பார்க்கிறேன்.

சில நாட்களுக்கு முன்பு, இங்கே தலைமைச் செயலாளர் வரவேற்புரை ஆற்றுகின்றபோது குறிப்பிட்டுச் சொன்னார். மாநில திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன் ஒரு அறிக்கையை கொண்டு வந்து என்னிடம் வழங்கினார்.
அதில், தமிழ்நாடு அரசின் திட்டங்கள் எந்தளவுக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கிறது என்று ஆய்வு முடிவுகளை எல்லாம் அதில் சொல்லி இருந்தார்கள். புதுமைப் பெண் திட்டத்தைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறது என்று நான் ஆர்வமாக எடுத்துப் பார்த்தேன்.

அதைப் படித்தபோது. எனக்கு மனநிறைவாக இருந்தது. மாதம்தோறும் நாம் ஆயிரம் ரூபாய் வழங்குவதால் ஆண்டுக்கு ஆண்டு கல்லூரிகளில் மாணவிகள் கூடுதலாக சேரத் தொடங்கி இருக்கிறார்கள் என்கின்ற விபரம் அந்த அறிக்கையில் இருந்தது.
நாங்கள் இந்தத் திட்டத்தை உருவாக்கியதன் நோக்கம் நிறைவேற்றப்பட்டது என்று நான் பெருமைப்பட்டேன். பணமில்லாமல் படிப்பை நிறுத்திய, பல்லாயிரம் மாணவியர், கல்லூரிகளை நோக்கி வரத் தொடங்கி இருக்கிறார்கள்.

உங்களுடைய படிப்புக்குப் பணம் மட்டுமல்ல, எந்தத் தடை வந்தாலும் அதை நான் உடைப்பேன்! மாணவிகளுக்கு மட்டும்தானா? மாணவர்களுக்கு இல்லையா? என்று மாணவர்கள் கேட்டார்கள்.

முந்தைய ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறமையின்மையால் ஏற்பட்ட நிதி நெருக்கடி ஒரு பக்கம்; ஒத்துழைப்பு தராத ஒன்றிய அரசு என்று ஏற்படுத்துகின்ற சிக்கல்கள் அது ஒரு பக்கம்; ஆனால், அதைப்பற்றி கவலைப்படாமல், மாணவர்களுக்காக. தமிழ்ப்புதல்வன் திட்டத்தை நாங்கள் தொடங்கினோம்! எந்த அப்பாவும். தன்னுடைய பிள்ளைகளின் படிப்புச் செலவுக்கு கணக்கு பார்க்க மாட்டார்கள்! அப்படித்தான் உயர் கல்விக்கான, திட்டங்கள் என்றால், எந்த நெருக்கடி இருந்தாலும் அதை நிறைவேற்றியே தீருவேன்.

கடந்த 9.8.2024 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில், அரசு கலைக் கல்லூரியில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கினோம். அதைத் தொடங்கியதில் இருந்து சுமார் 3 லட்சத்து 52 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். இன்று வரை மாணவர்களுக்கு உதவித்தொகையாக 143 கோடியே 41 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.

360 கோடி ரூபாயை இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கீடு செய்திருக்கிறோம். அடுத்து, அரசுப் பள்ளி மாணவ மாணவியருக்கு மட்டும்தானா? அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு கிடையாதா? என்று ஒரு கோரிக்கை வைத்தார்கள்.
அரசு உதவிபெறும் பள்ளியில் படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவியருக்கும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற வகையில் இன்றைக்கு புதுமைப் பெண் திட்டத்தை விரிவுபடுத்தியிருக்கிறோம்.

இந்தத் திட்டத்தின்கீழ், தமிழ்நாடு முழுவதும் சுமார் 75 ஆயிரம் மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கப் போகின்றோம்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அவர், “இன்றைக்கு ஆயிரம் ரூபாய் பெறக்கூடிய நீங்கள், நாளை உங்களைப் போல பலருக்கு உதவவேண்டும்: வழிகாட்டவேண்டும்! என்றாவது ஒருநாள் என்னைச் சந்தித்து, “புதுமைப் பெண் திட்டத்தால் பயன் பெற்ற நான் இப்போது இந்த நிலையில் இருக்கிறேன்” என்று சொன்னால். அதுதான் எனக்கு பெருமகிழ்ச்சி! எனக்குப் பெரிய பெருமை! என்னுடைய காலத்துக்குப் பிறகும். என் பேர் சொல்லும் பிள்ளைகளாக நீங்கள் எல்லாம் இருக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துகளையும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அங்கு வந்திருந்த மாணவிகள் முதல்வருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

15 நிமிட சந்திப்பு… விஜய்க்கு வாழ்த்து சொன்ன கவர்னர்!

கன்னியாகுமரி கடலில் அடுத்த அற்புதம்… இரு பாறைகளை இணைக்கும் கண்ணாடி பாலம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share