காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பதக்கம் அறிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகை இன்று (ஜனவரி 13) போகி கொண்டாட்டத்துடன் தொடங்கியது. இதற்கிடையே பல்வேறு அலுவலகங்களிலும் விடுமுறைக்கு முன்னதாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
அந்தவகையில் நேற்று தமிழ்நாடு போலீசார் பொங்கல் விழாவை கொண்டாடினர்.
சென்னை ஆவடியில் உள்ள தமிழ்நாடு அதிதீவிரப்படை மற்றும் பயிற்சிப்பள்ளியில் டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கோலப்போட்டி, Lucky Corner,யோகா, Tug of War, Dog Squad Demo மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு டிஜிபி பரிசு வழங்கினார்.
பின்னர் தனது மனைவியுடன் புது பானையில் பொங்கலிட்டு, மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
குதிரை வண்டி, மாட்டு வண்டி, மீன் தொட்டி, வயல் வெளி, கிணறு என கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த காட்சிகளை போலீசார் கண்டு ரசித்தனர்.
டிஜிபி சங்கர் ஜிவால் காளைக்கு உணவு அளித்தும், நாற்று நட்டும, கிணற்றில் தண்ணீர் இறைத்து, கூரை வீட்டின் உள்ளே சென்று சாமி கும்பிட்டு பொங்கலை கொண்டாடினார்.

இந்த நிலையில் இன்று (ஜனவரி 13) முதல்வர் ஸ்டாலின் போலீசாருக்கு பதக்கம் அறிவித்துள்ளார்.
அந்த அறிவிப்பில், “தமிழ்நாட்டில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் ஆகிய துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு, காவல் துறையில் (ஆண்/பெண்) காவலர் நிலை-2, காவலர் நிலை-1, தலைமைக் காவலர் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3000 பணியாளர்களுக்கு “தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்” வழங்கப்படுகிறது.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், இயந்திர கம்மியர் ஓட்டி, தீயணைப்போர் ஓட்டி (தரம் உயர்த்தப்பட்ட இயந்திர கம்மியர் ஓட்டி) மற்றும் தீயணைப்போர் (தரம் உயர்த்தப்பட்ட முன்னணி தீயணைப்போர்) ஆகிய நிலைகளில் 120 அலுவலர்களுக்கும். சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் முதல் நிலை வார்டர்கள் (ஆண்), இரண்டாம் நிலை வார்டர்கள் (ஆண்) மற்றும் இரண்டாம் நிலை வார்டர்கள் (பெண்) நிலைகளில் 60 பேர்களுக்கும் “தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள்” வழங்கப்படும்.
இந்த பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலைவேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி ரூ.400/-, 2025 பிப்ரவரி 1-ம் தேதி முதல் வழங்கப்படும்.
மேலும், காவல் வானொலி பிரிவு, மோப்ப நாய் படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 நபர்கள் வீதம், மொத்தம் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு “தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்” வழங்கப்படும்.
இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்குத் தக்கவாறு ரொக்க தொகை வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் 16,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
27வது மாடியில் வசிப்பது ஏன்? – ரகசியத்தை வெளியிட்ட நீடா அம்பானி
வெறிச்சோடிய சென்னை… சொந்த ஊருக்கு செல்ல கைகொடுக்கும் அரசு பேருந்துகள்!