காவலர்களை வீட்டு வேலைக்கோ அல்லது தனிப்பட்ட வேலைக்கோ பயன்படுத்தும் அதிகாரிகள் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று (நவம்பர் 29) உத்தரவிட்டுள்ளது.
புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனக்கூறி சுஜாதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “ஒரு அறையில் 60 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாகவும், புழல் சிறையில் 203 வார்டன் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு, அவர்களில் 60 பேர் ஒரு ஷிப்ட்க்கு பணியில் இருக்க வேண்டுமென விதி உள்ள நிலையில் 15 வார்டன்கள் மட்டுமே பணியில் உள்ளதாகவும், மீதமுள்ள வார்டன்கள் சிறைத்துறை டிஜிபி, ஐஜி உள்ளிட்ட அதிகாரிகளின் வீட்டு வேலைக்கு பயன்படுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 8ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், சீருடைப் பணியாளர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தக்கூடாது என பலமுறை உத்தரவிட்டும் அந்த நடைமுறை தொடர்வதாகவும், இந்த முறையை ஒழிக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தது.
மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறை வார்டன்கள் மற்றும் காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் குறித்து சிபிசிஐடி மற்றும் உளவுத்துறை உதவியுடன் விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உள்துறை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்படும் காவலர்களை கண்டறிந்து சிறைப் பணிகளுக்கு மாற்ற வேண்டுமெனவும், உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த உத்தரவை மூன்று வாரங்களில் செயல்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
அதன்படி இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், உள்துறை செயலாளரின் அறிக்கையை தாக்கல் செய்தார்.
தொடர்ந்து அவர், காவலர்களை வீட்டு வேலைக்கோ அல்லது தனிப்பட்ட வேலைக்கோ பயன்படுத்தும் அதிகாரிகள் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு உள்துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஆர்டர்லி முறையை முழுமையாக ஒழிக்க வேண்டுமென டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், வீட்டு வேலைக்கு பயன்படுத்தப்படும் சிறைக் காவலர்களை உடனடியாக சிறைப் பணிக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்படும் என்று சிறைத்துறை டிஜிபி தெரிவித்துள்ளதோடு, சிறைக் காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைத்துறை டிஜிபி உறுதி அளித்துள்ளதாக கூறினார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், காவலர்களை வீட்டு வேலைக்கோ அல்லது தனிப்பட்ட வேலைக்கோ பயன்படுத்தும் அதிகாரிகள் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை டிசம்பர் 20ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
திருப்பூர் கொடூரம்… மேற்கு மண்டலத்தில் தொடரும் ஆதாய கொலைகள்!
‘சொர்க்கவாசல்’ திருடப்பட்ட கதையா? ஆர்.ஜே.பாலாஜி இப்படிப்பட்டவரா?