அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு!

Published On:

| By Kalai

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜூலை 11 -ல் நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருந்தனர், இந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஓ.பன்னீர்செல்வத்தையும் கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சட்ட விரோதமாக பொதுக்குழு நடந்ததாகவும் இதனை செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். முதலில் வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். அவர் இந்த வழக்கை விசாரிக்க பன்னீர் தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய 2 தினங்கள் விசாரணை நடந்தது.

இதில் எடப்பாடி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் விஜய நாராயணனும், பன்னீர் தரப்பில் குரு கிருஷ்ணகுமாரும் ஆஜராகி வாதாடினர். சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் கூறப்பட்டது. இதனை ஏற்க மறுத்து பன்னீர் தரப்பு வழக்கறிஞர் தங்கள் தரப்பு நியாயங்களை நீதிபதி முன் வைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தார். இந்தநிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கலை.ரா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share