ADVERTISEMENT

ஆரிய மதவெறி கட்சிகளின் திடீர் முருக பக்தி.. தமிழ்நாடு இடம் தராது: கி.வீரமணி

Published On:

| By Minnambalam Desk

Veeramani RSS

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் வகையறாக்களான ஹிந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத் போன்ற ஆரிய (ஹிந்து) மதவெறி கட்சிகளின் திடீர் ‘முருக பக்தி’யைக் கண்டு, ஏமாறுவதற்குப் பெரியார் மண்ணான திராவிட மண் – தமிழ்நாடு ஒருபோதும் இடந்தராது என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி எச்சரித்துள்ளார். Tamil Nadu Won’t Tolerate Sudden Murugan Devotion

இது தொடர்பாக கி.வீரமணி கூறியுள்ளதாவது:சென்ற சில மாதங்களுக்கு முன்பே, இப்போது அரசியல் ‘புது இடந்தேடி’யாகியுள்ள அண்ணாமலை போன்றவர்கள் முன்னின்று, அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் மதக்கலவரம் ஏற்படச் செய்யவே, ‘‘திருப்பரங்குன்றத்திலுள்ள முருகன் கோவிலுக்கு ஆபத்து, அந்த மலையை இஸ்லாமியர்கள் தங்கள் வயப்படுத்த, தங்களது மதநெறிக்கு ஏற்ப ‘சிக்கந்தர் மலை’ என்று மாற்றிட முயற்சிக்கிறார்கள், ஹிந்துக்களே ஒன்று சேருங்கள்‘‘ என்று அங்கே கண்டன ஆர்ப்பாட்டக் கலவரம் ஏற்படுத்த முயன்று தோற்றுவிட்டனர். அந்தக் கலவர முயற்சிகள் வெறும் ‘புஸ்வாணம்’ ஆகிவிட்டன.

ADVERTISEMENT

கலவரம் உருவாக்க முயற்சி

அவ்வூரில் உள்ள அனைத்து மக்களும் ஹிந்து, முஸ்லிம் மற்றும் நம்பிக்கையாளர் அல்லாத குடிமக்கள் எல்லோரும் ஒரே குரலில், ‘‘நாங்கள் ஒன்றுபட்டு சகோதரர்களாக வாழுகிறோம்; ஏன் வெளியூர் ஆட்களைக் கொணர்ந்து இங்கே கலவரம் உருவாக்க முயற்சிக்கிறீர்கள்’’ என்று முகத்தில் அறைந்தார் போல் கேட்டனர்.

ADVERTISEMENT

பகுத்தறிவுக்கு கேடு விளைவிப்பு

என்றாலும், மக்களுக்குள்ள கடவுள் பக்தியைப் பயன்படுத்தி, கோவில்களை ஆர்.எஸ்.எஸ். மற்றும் புரோகித வர்க்கம் தங்களது ஆதிக்கப் பீடங்களாகவே ஆக்கிக் கொள்ளும் வித்தையில் கைதேர்ந்தவர்களாகிவிட்டதால், கோவில், திருவிழா, சடங்கு, சம்பிரதாயங்களை ஒரு வாய்ப்பாக்கி, மக்கள் பகுத்தறிவு, சமத்துவம், சுயமரியாதைக்குக் கேடு விளைவிக்கின்றனர்.

ADVERTISEMENT

ஓட்டு வங்கியாக பக்தி போதை

2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், இந்தப் பக்தி போதையை ‘ஓட்டு வங்கி’யாக்கிக் கொள்ளவே ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் கூட்டம் முருகக் கடவுளைக் காப்பாற்ற மாநாடு போடுகிறார்களாம்! சர்வ சக்தி வாய்ந்த கடவுளுக்கு இவர்களின் பாதுகாப்பு ஏன் தேவை? என்று சிறுபிள்ளைக்கூட – பகுத்தறிவுடன் கேள்வி கேட்குமே தமிழ்நாட்டில்! இது பக்தியில்லை; அல்லவே அல்ல!

பக்தி ஆயுதமாக முருக காதல்

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கூட்டத்தினர் தி.மு.க. ஆட்சியை ஒழித்திட, மற்ற வியூகங்கள் அனைத்தும் தோற்றுவிட்டதால், முழுக்க முழுக்க மதக் கலவரம் ஏற்படுத்திட, புதிய அரசியல் – ‘பக்தி ஆயுதமாக’ முருகக் காதல் பொத்துக் கொண்டு வந்துவிட்டது!

அயோத்தியிலேயே வெல்ல முடியவில்லை

வட மாநிலங்களில் எல்லாம் ‘ராம், ராம்’ என்று ராமன் கோவிலைக் காட்டி உ.பி. போன்ற மாநில ஆட்சிகளை முன்பு கைப்பற்றினர். ஆனால், அதில்கூட ‘God Show’ பிரதமர் மோடி நடத்தியும், அயோத்தியிலேயே கூட பி.ஜே.பி. வெற்றி பெறாமல் எதிர்க்கட்சியினரே வெற்றி பெற்றனர்!

மே.வங்க காளி பூஜை

அதேபோல், மேற்குவங்கத்தில் காளி பூஜை ஒரு முக்கிய பண்டிகை. சில மாதங்களுக்கு முன்பு, அதிலும் தலையிட்டுப் பார்த்தனர். காளி பக்திக்கும், இராம பக்திக்கும்கூட எதிர்களங்கள் அமைத்து, அங்குள்ள பா.ஜ.க. அல்லாத திரிணாமுல் காங்கிரஸ் மம்தா ஆட்சியை அகற்ற, ‘கஜகர்ணம்’ போட்டு, மூக்குடைபட்டனர்!

திராவிட மாடல் அசைக்க முடியாத கோட்டை

தமிழ்நாட்டில் ஏற்கெனவே பா.ஜ.க. தமிழ்நாடு கட்சித் தலைவர் வேலோடு சுற்றிச் சுற்றி வந்தார்; முருகன் அருள்பாலிக்கவில்லை என்பது நாடறிந்த உண்மை! மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி என்பது
அசைக்க முடியாத கொள்கைக் கோட்டையாக உள்ளது! வேலைத் தூக்கியவர், முன்பு தாராபுரம் தொகுதியில் சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்றார். பிறகு நீலகிரி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, ஆ.இராசாவை எதிர்த்து நின்றபோது, முடிவு என்னாயிற்று என்பது எல்லோரும் அறிந்ததே!

கொள்ளிக்கட்டையால் தலையை சொறிவதில்லை

தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக வாக்காளர்கள் தங்களது பக்தி உணர்வுக்காக ஒருபோதும் கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்ளவே மாட்டார்கள். இவ்வாறு வீரமணி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share