ADVERTISEMENT

தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் புதிய சாதனை – என்ன தெரியுமா?

Published On:

| By indhu

Tamil Nadu Urban Habitat Development Board new achievement! - You know what?

இந்தியாவிலேயே முதன் முறையாக முன்னாள் முதல்வர் கலைஞர் 1970-ஆம் ஆண்டில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தை தொடங்கி வைத்தார். குடிசைப் பகுதிகளை மேம்படுத்துதல் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் முதன்மையான நோக்கமாகும்.

இந்தநிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளில் ரூ.3,198 கோடியில், 28,824 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்து தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் புதிய சாதனை படைத்துள்ளது.

ADVERTISEMENT

இதுத்தொடர்பாக, வெளியிடப்பட்ட அறிக்கையில், “திமுக ஆட்சியில் மூன்றாண்டுகளில் ரூ.3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் புதிய சாதனையாகும்.

நகர்ப்புற ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வீட்டுவசதி வாய்ப்புகள் மட்டுமே போதுமானவை அல்ல.

ADVERTISEMENT

அவர்களுக்குக் குடிநீர், சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, கல்வி, மருத்துவ வசதி, திடக்கழிவு மேலாண்மை, பொது வெளியிடம் போன்ற போதுமான நகர்ப்புற வசதிகளுடன் வீட்டுவசதிகளை ஏற்படுத்துவதும் அவசியம் என்று கருதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 செப்டம்பர் 1ஆம் தேதி அன்று தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் பெயரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்து ஆணையிட்டார்கள்.

எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலையை ஏற்படுத்திட உட்கட்டமைப்புத் திட்டங்களைக் குறித்த காலத்திற்குள் திட்டமிட்டபடி நிறைவேற்றுவதற்கு தமிழக முதல்வர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்தில் சமூகத்தில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள மக்களுக்கு வீடுகளைத் தாமதமின்றி வழங்கி வருகிறார்கள்.

ADVERTISEMENT

வீடற்ற மக்களுக்கு வீட்டினை அளிப்பதோடு இக்குடியிருப்புகளில் ஒரு பல்நோக்கு அறை, உறங்கும் அறை, சமையலறை, கழிவறை வசதிகளும், குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வசதி, மின்தூக்கி, சாலைகள், தெருமின் விளக்குகள், கான்கிரீட் நடைபாதை, மழைநீர் வடிகால் போன்ற அடிப்படை வசதிகளுடன் ஏற்படுத்தி வருகிறார்.

மேலும், சமூக வசதிகளான பள்ளிகள், நூலகம், பூங்காக்கள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையம், சிறுகடைகள், பால் விற்பனை நிலையம், சமுதாயக்கூடம் போன்ற வசதிகள் குடியிருப்புகளின் அருகில் அமைந்திட ஆவன செய்திடுமாறும் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

அடுக்குமாடி குடியிருப்புகள்

திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுநாள் வரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 92 திட்டப் பகுதிகளில் ரூ.3,197.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட்டு வீடற்ற ஏழை, எளிய மக்கள் மற்றும் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன.

அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு

திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை, 37,720 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளன. மேலும் 3,023 ஆணைகள் பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான விற்பனை பத்திரங்கள் மற்றும் 1,733 மேம்படுத்தப்பட்ட மனைகளுக்கும் விற்பனை பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மக்கள் தாமாக வீடு கட்டும் திட்டம்

மக்கள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின்கீழ் மூன்றாண்டுகளில், 1,68,495 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 89,429 பயனாளிகளுக்குப் பணி ஆணைகள் வழங்கப்பட்டுப் பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன.

மேலும், மக்கள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2,078.37 கோடி திட்டமதிப்பீட்டில் 69,701 புதிய தனி வீடுகள் கட்டுவதற்கு அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

சிதிலமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம்

சிதிலமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாக 17 திட்டப் பகுதிகளில் உள்ள 7,582 சிதிலமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு மீண்டும் அதே இடத்தில் ரூ.1,608.88 கோடி மதிப்பீட்டில் 9,522 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

பழுது நீக்குதல் மற்றும் புதுப்பித்தல் பணிகள்

ஏற்கனவே கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டமைப்பு உறுதித்தன்மை மற்றும் ஆயுட்காலத்தினை அதிகரிக்க ரூ.59.80 கோடி செலவில் பழுது நீக்குதல் மற்றும் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ள 117 திட்டப்பகுதிகளில் 76,434 முடிக்கப்பட்டுள்ளன.

புனரமைப்புப் பணிகள்

சென்னை மற்றும் இதர நகரங்களில் உள்ள 79 திட்டப் பகுதிகளில் உள்ள 31,239 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குக் கட்டமைப்பு வசதிகளை ரூ.82.57 கோடி செலவில் மேம்படுத்த இறுதி செய்யப்பட்டுப் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகவும், நகர்ப்புற மக்களின் திறன்களை மேம்படுத்தும் வகையிலும் பல்வேறு இனங்களில் 4,771 பேருக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!

குளு குளு செய்தி – 10 மாவட்டங்களில் கனமழை மேகங்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share