தமிழ்நாட்டில் புதியதாக 6,648 வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழ்நாட்டில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்ந்துள்ளது.
- தற்போதைய வாக்குச் சாவடிகள் 68,467
- உருவாக்கப்பட்டவை 6,648; இதில் இடமாற்றம் செய்யப்பட்டவை- 80; பெயர் மாற்றம் செய்யப்பட்டவை 2,509.
தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின் படி, 01.01.2026-ஐ தகுதி பெறும் நாளாக கொண்ட சிறப்புத் திருத்தத்தின் மீதான நடவடிக்கைகள் 27.10.2025 முதல் 14.02.2026 வரை மேற்கொள்ளப்படுகின்றன. அந் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வாக்குச் சாவடிகளை மறுசீரமைத்தல் மற்றும் பிரிவுகளை உருவாக்குதல் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன.
இது தொடர்பாக, 234 வரைவாளர் பதிவு அலுவலர்கள் மற்றும் 38 மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
அவர்களின் பரிந்துரைகள் மற்றும் கோரிக்கைளைப் பரிசீலித்த பிறகு, வாக்குச்சாவடிகளின் பட்டியலை தயாரித்துள்ளனர்.
மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், பதிவு அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குச் சாவடிகளை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகளை, பின்வரும் அளவுகோல்களின் அடிப்படையில் அனுப்பியுள்ளனர்:
- வாக்காளர் எண்ணிக்கை 1200-க்கும் அதிகமான உள்ள பகுதிகளில் புதிய வாக்குச் சாவடிகளை உருவாக்குதல்.
- பகுதிகளுக்கிடையே பிரிவுகளை மறுசீரமைத்தல் மற்றும் பிரிவுகளை உருவாக்குதல்
- வாக்குச் சாவடிகளின் அமைவிடம்/கட்டிடம் மாற்றம்
- வாக்குச் சாவடிகளின் பெயர் மாற்றம்
- வாக்குச் சாவடிகளை இணைத்தல்.
வாக்குச் சாவடிகள் மறுசீரமைப்பு பின்வரும் அம்சங்களை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டது.
- ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்காளர்களின் எண்ணிக்கை 1200-க்கு உட்படுத்தப்படுகிறது.
- வாக்குச் சாவடிகள் 2 கிலோமீட்டர் சுற்றளவில் அமைவதால் எந்தவொரு வாக்காளரும் வாக்களிக்க 2 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்யவேண்டிய அவசியமில்லை.
- காவல் நிலையங்கள், மருத்துவமனைகள், கோயில்கள் அல்லது பிற மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் எந்த வாக்குச் சாவடியும் இல்லை.
- வாக்குச் சாவடியில் இருந்து 200 மீட்டருக்குள் எந்த அரசியல் கட்சி அலுவலகமும் இல்லை.
- குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் ஒரே பிரிவிலும், ஒரே இடத்திலும் வைக்கப்பட்டுள்ளனர்
- வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பிற்கு முன், மாநிலத்தில் 68,467 வாக்குச்சாவடிகள் இருந்தன.
- வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பிற்கு பிறகு மாநிலத்தில் 75,035 வாக்குச்சாவடிகள் உள்ளன.
