டாஸ்மாக் வழக்கில் தீர்ப்பு… முக்கிய அம்சங்கள் என்னென்ன?

Published On:

| By Selvam

சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை நிறுவனம் மற்றும் மதுபான ஆலைகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் மற்றும் அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்று ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. tasmac case judgment points

இந்த வழக்கில் தமிழக அரசின் தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி, அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ ஆகியோர் ஆஜராகி தங்களது வாதங்களை முன்வைத்தனர்.

ADVERTISEMENT

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைடைந்த நிலையில், இந்த வழக்கில் நேற்று (ஏப்ரல் 23) தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், எஸ்.எம்.சுப்பிரமணியன், ராஜசேகரன் அமர்வு தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்தனர். அமலாக்கத்துறை தங்களது சோதனையை தொடரலாம் என்று தீர்ப்பு வழங்கினர்.

நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!

1. கைது நடவடிக்கை மேற்கொள்ளும்போது தான் தனிப்பட்ட நபரின் சுதந்திரம் பாதிக்கப்படும். சட்டத்தின் அடிப்படையில் சோதனை நடத்தி ஆதாரங்களை சேகரிக்கும்போது சில நேரங்களில் உரிமை சிறிது நேரத்திற்கு பாதிக்கப்படத்தான் செய்யும். அது மிகப்பெரிய பாதிப்பு என்று கூறிவிட முடியாது.

ADVERTISEMENT

2.டாஸ்மாக் அதிகாரிகளை 100-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு அமலாக்கத்துறை மிரட்டியதாக, அரசு தரப்பில் கூறும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியவில்லை. ஊழலுக்கு எதிரான சோதனையில் அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமே தவிர, சாதாரண ஒரு சோதனையால் அனைத்தும் உடைந்துவிட்டது என்பது போல குற்றம்சாட்டக் கூடாது.

3.மிரட்டலுக்கு ஆளானதாக கூறப்படும் அதிகாரிகள் இதுகுறித்து புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. பஞ்சநாமா ஆவணத்திலும் சோதனை அமைதியாக, சட்டப்படி நடந்தது என்று தான் கூறப்பட்டுள்ளது. ஆதாரமே இல்லாமல் அரசு அதிகாரிகள் கொடுமைப்படுத்தப்பட்டதாக எந்த அடிப்படையில் அரசு குற்றம்சாட்டுகின்றது என்று தெரியவில்லை.

ADVERTISEMENT

4.ஒருவேளை சோதனையின் போது அதிகாரிகள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் தான் வழக்கு தாக்கல் செய்திருக்க வேண்டும். ஏன் டாஸ்மாக் நிர்வாகமும், தமிழக அரசும் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது? ஒரு சுமுகமான சோதனைக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.

5.இதுபோன்ற வழக்கை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்த வழக்குகளை ஏற்றுக்கொண்டால் அது சட்டத்தையே சீர்குலைத்துவிடும். மனுதாரர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் விசித்தரமாக உள்ளது.

6.பெண் அதிகாரிகள் பாதுகாப்பு இல்லாத இரவு நேரத்தில் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர் என்று மனுதாரர் தரப்பு கூறுகிறது. அமலாக்கத்துறையின் சட்டப்படியான நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக பெண் அதிகாரிகளையும், ஊழியர்களையும் அரசு ஒரு கேடயமாக பயன்படுத்தி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. பெண் ஊழியர்கள் ஊக்கத்தையும் அதிகாரத்தையும் இழக்கச் செய்யும் விதமாக அரசு செயல்படக்கூடாது.

7.சட்டத்தை தவறாக பயன்படுத்தி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் அதிகாரிகளுக்கு எதிரான இந்த குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது. இதுகுறித்து ஆழமான விசாரணை தேவை.

8.சட்டவிரோத பணப்பரிமாற்றம் என்பது தேசத்திற்கு எதிரான குற்றம் ஆகும். அதனால் இந்த சோதனையே தேச நலனுக்கானது தான்.

9.அரசியல் காழ்ப்புணர்சியின் காரணமாக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்ற மனுதாரர்களின் கருத்துக்களை ஏற்க முடியவில்லை. ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகள் எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கை எடுப்பது இயல்பான ஒன்றாகவே உள்ளது. இதையெல்லாம் நீதிமன்றத்தால் பரிசீலிக்க முடியாது. எங்கள் முன்பு உள்ள ஆவணங்கள் அடிப்படையில் மட்டுமே குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதா? இல்லையா? என்பதை பார்க்க முடியும்.

10.டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதால், இந்த வழக்குகளை தள்ளுபடி செய்கிறோம். சோதனையின் அடிப்படையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கலாம்.

என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. tasmac case judgment points

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share