இனி வீட்டில் இருந்தே பத்திரப்பதிவு… புரோக்கர் தொல்லை இல்லை, அலையத் தேவையில்லை! தமிழ்நாடு அரசின் ‘ஸ்டார் 3.0’ சூப்பர் பிளான்!

Published On:

| By Santhosh Raj Saravanan

tamil nadu star 3.0 property registration online scheme from home

சொத்து வாங்குவது, விற்பது என்றாலே நம் நினைவுக்கு வருவது சார்பதிவாளர் அலுவலகங்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பது, சர்வர் பிரச்சனை, மற்றும் இடைத்தரகர்களின் ஆதிக்கம் தான்.

ஆனால், இந்தத் துயரங்களுக்கெல்லாம் விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப் போகிறது தமிழ்நாடு அரசு. பத்திரப்பதிவு துறையில் ஒரு டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்த ‘ஸ்டார் 3.0’ (STAR 3.0) என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

ADVERTISEMENT

என்ன இது ‘ஸ்டார் 3.0’? தற்போது நடைமுறையில் உள்ள ‘ஸ்டார் 2.0’ மென்பொருளில் அவ்வப்போது ஏற்படும் சர்வர் கோளாறுகள் மற்றும் தாமதங்களைக் களைந்து, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்படும் புதிய திட்டம் தான் இந்த ஸ்டார் 3.0. இதற்காகச் சுமார் ₹323.45 கோடி நிதி ஒதுக்கப்பட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

வீட்டில் இருந்தே பத்திரப்பதிவு – எப்படிச் சாத்தியம்? இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய சிறப்பம்சமே, பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பதுதான்.

ADVERTISEMENT

• தானியங்கி பத்திரம்: சொத்து விற்பவர் மற்றும் வாங்குபவரின் பெயர், முகவரி, சொத்து விவரங்களை மென்பொருளில் உள்ளீடு செய்தால் போதும். சாப்ட்வேரே தானாகப் பத்திரத்தைத் தயார் செய்துவிடும்.

• பயோமெட்ரிக் & ஓடிபி: ஆதார் எண்ணைப் பதிவு செய்து, விரல் ரேகை மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி (OTP) மூலம் அங்கீகாரம் வழங்கினால், பத்திரப்பதிவு 10 நிமிடங்களில் முடிந்துவிடும்.

ADVERTISEMENT

• தேவையான ஸ்கேனர், பிரின்டர் மற்றும் வெப் கேமரா வசதி இருந்தால், வீட்டில் இருந்தபடியே இதைச் செய்ய முடியும்.

உடனடி நகல் (Certified Copies): தற்போது ஒரு பத்திரத்தின் நகல் (Certified Copy) வேண்டுமென்றால், ஆன்லைனில் விண்ணப்பித்து, அது பதிவாளரின் ஒப்புதலுக்குச் சென்று, நமக்குக் கிடைக்கக் குறைந்தது 2 நாட்கள் முதல் ஒரு வாரம் ஆகிறது. ஆனால், ஸ்டார் 3.0 திட்டத்தில் பதிவு செய்த அடுத்த நிமிடமே, டிஜிட்டல் கையெழுத்திடப்பட்ட சான்றிட்ட நகலை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

சங்கங்கள் பதிவு இனி ஈஸி: புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும்போது, அங்குள்ள ‘குடியிருப்பு உரிமையாளர்கள் நலச்சங்கத்தை’ (Association) பதிவு செய்ய இனி அலுவலகம் செல்லத் தேவையில்லை. இருக்கும் இடத்தில் இருந்தே சங்கத்தைப் பதிவு செய்து ஒப்புதல் பெறலாம். அதேபோல், வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளைப் பதிவு செய்யவும் இனி அலையத் தேவையில்லை.

ஊழலுக்கு முற்றுப்புள்ளி:

• நோ கேஷ் (No Cash): பத்திரப்பதிவுக்கான அனைத்துக் கட்டணங்களும் ஆன்லைன் மூலமாகவே செலுத்த வேண்டும் என்பதால், பணப் பரிமாற்றத்தில் நடக்கும் முறைகேடுகள் தவிர்க்கப்படும்.

• டிஜிட்டல் ஆவணங்கள்: 1895-ம் ஆண்டு முதல் உள்ள பழைய ஆவணங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருவதால், வில்லங்கம் பார்ப்பது இன்னும் எளிதாகும்.

எப்போது அமலுக்கு வரும்? இந்தத் திட்டம் முதற்கட்டமாகச் சோதனையோட்ட அடிப்படையில் (Pilot Project) கோயம்புத்தூர் மாவட்டம், காந்திபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அங்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, விரைவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 590 சார்பதிவாளர் அலுவலகங்களிலும் இது விரிவுபடுத்தப்படும்.

வருவாய் துறை, நில நிர்வாகத் துறை மற்றும் சர்வே துறை ஆகியவற்றை ஒன்றிணைத்து, ஜிபிஎஸ் (GPS) தொழில்நுட்பத்துடன் இது செயல்படவுள்ளதால், போலிப் பத்திரப் பதிவுகள் அடியோடு ஒழிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தும் இந்த ‘சூப்பர் பிளான்’ விரைவில் பயன்பாட்டிற்கு வந்தால் அது ஒரு பெரிய வரப்பிரசாதமே!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share