கேரளாவில் ஏடிஎம் -ல் கொள்ளையடித்து வந்த கும்பலை தமிழக போலீசார் நாமக்கல் அருகே சுட்டு பிடித்தனர்.
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள ஏடிஎம் ஒன்றில் கொள்ளையடித்த பணத்தை கண்டெய்னர் லாரி மூலமாக தமிழகம் நோக்கி ஒரு கும்பல் எடுத்து செல்வதாக கேரளா போலீஸ் தமிழக போலீசாருக்கு தகவல் கொடுத்தது. .
இதையடுத்து தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், மேற்கு மற்றும் தெற்கு மண்டல போலீசாரை அலர்ட் செய்தார்.
“கேரளாவில் இருந்து ஒரு கண்டெய்னர் லாரியில் பணத்துடன் கொள்ளையர்கள் வருகிறார்கள். அவர்களிடம் ஆயுதங்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள். அதனால் கவனமாக துப்பாக்கியுடன் சென்று அந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தி கொள்ளையர்களை கைது செய்யுங்கள்” என்று உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் திருச்சூரில் இருந்து பாலக்காடு, வாழையூர் வழியாக கோவை வந்த அந்த கண்டெய்னர் லாரி, எல்&டி பைபாஸ் சாலை வழியாக கனியூர் சுங்கச்சாவடி, விஜயமங்கலம் சுங்கச்சாவடிகளை கடந்துள்ளது.
அப்போது பணம் கொள்ளையடிக்கப்பட்டு வருவது இந்த லாரிதான் என உறுதி செய்த நாமக்கல் மாவட்ட போலீசார் அதை சேஸ் செய்து சென்றனர்.
போலீஸ் பின்னால் வருகின்றனர் என்பதை அறிந்து கண்டெய்னர் லாரி ஓட்டுநர் எங்கேயும் நிறுத்தாமல், சாலையில் செல்லக்கூடிய வாகனங்களை மோதி தள்ளிவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் குமாரப்பாளையம் அருகில் லட்சுமிநகரை கடந்ததும் கண்டெய்னர் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி மடக்கி பிடித்தனர்.
துப்பாக்கி முனையில் லாரி ஓட்டுநரை பிடித்த போலீசார், கண்டெய்னரை திறக்க கூறியுள்ளனர். கண்டெய்னர் கதவை திறந்ததும் உள்ளே இருந்தவர்கள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர்.
அப்போது போலீசார் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் மூன்று பேர் காயமடைந்தனர். அதன்பிறகு கன்டெய்னரில் இருந்த கார் மற்றும் பணத்துடன் வந்த ஓட்டுநர் உட்பட 7 பேரையும் பிடித்தனர்.
தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்று குமாரபாளையம் டிஎஸ்பி இமயவர்மன் விசாரணை நடத்தி வருகிறார்.
கேரளாவில் ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்து தப்பிய கும்பல், நாமக்கல் அருகே பிடிபட்டது#Namakkal | #Kerala pic.twitter.com/yo3MYbheiw
— Priya Gurunathan (@JournoPG) September 27, 2024
கன்டெய்னரில் வந்த கும்பலிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், ‘ஒரு கன்டெய்னர் லாரியில் காரை வைத்துக்கொண்டு வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று கண்காணிப்போம். அந்த இடத்தில் எங்களது ஆட்களையும் வைத்திருப்போம். அப்போது ஏதேனும் ஏடிஎம்-ல் பணம் நிரப்பப்படுகிறதா? என்பதை அறிந்து பணத்தை கொள்ளையடித்துவிட்டு, காரையும் கண்டெய்னரில் ஏற்றிக்கொண்டு தப்பிவிடுவோம்” என்று அந்த கும்பல் கூறியதாக போலீசார் கூறுகின்றனர்.
“அதுபோன்று இன்றைய தினம் போலீசார் விரட்டி வருவதை கவனித்த ஓட்டுநர் கன்டெய்னர் உள்ளே இருந்த கொள்ளையர்களிடம், போலீஸ் விரட்டி வருகிறது. என்ன செய்யலாம்” என்று ஆலோசனை கேட்க உள்ளே இருந்தவர்கள், “லாரியை எங்கும் நிறுத்த வேண்டாம். முடிந்தளவுக்கு வேகமாக சென்று தப்பிக்கக் கூடிய இடத்தில் நிறுத்திவிடுங்கள்” என்று கூறியிருக்கின்றனர்.
ஓட்டுநரும் அவர்களது ஆலோசனைபடி வண்டியை தாறுமாறாக ஓட்டியுள்ளார். அப்போதுதான் சாலையில் பயணித்த இரண்டு பைக்குகள், கார்களை மோதி பரபரப்பை ஏற்படுத்தினார். சாலையில் இருந்த பொதுமக்களும் போலீசாரும் சேர்ந்து லாரியை விரட்டினர். லட்சுமிநகரை தாண்டியதும் வேறு வழி இல்லாததால் போலீசார் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தி லாரியை நிறுத்தினர்” என்றும் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வணங்காமுடி
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார் கே.ஆர்.ஸ்ரீராம்
மோடிக்கு பரிசளித்து கோரிக்கை வைத்த ஸ்டாலின்