ADVERTISEMENT

மலேசியாவில் தமிழருக்கு நேர்ந்த கொடுமை… தண்ணீர் ஊற்றி, எட்டி உதைத்து விரட்டிய அவலம்! – வைரல் வீடியோவின் பின்னணி

Published On:

| By Santhosh Raj Saravanan

tamil nadu man humiliated in malaysia viral video safiudeen trichy news

பிழைப்பு தேடி வெளிநாடு செல்லும் தமிழர்கள் படும் பாடு சொல்லி மாளாது. மலேசியாவில் சாலை ஓரத்தில் படுத்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை, தண்ணீர் ஊற்றியும், எட்டி உதைத்தும் அவமானப்படுத்திய வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பார்ப்பவர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது.

ADVERTISEMENT

வைரல் வீடியோவில் என்ன இருக்கிறது? மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஒரு வங்கிக்கு வெளியே (AmBank), நடைபாதையில் ஒருவர் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் செக்யூரிட்டி பெண் ஒருவர், அவர் முகத்தில் ஹோஸ் பைப் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்கிறார். ஈரம் தாங்க முடியாமல் அந்த நபர் எழும்போது, அருகில் இருந்த மற்றொரு நபர் அவரை ஈவு இரக்கமில்லாமல் எட்டி உதைத்து அங்கிருந்து விரட்டுகிறார்.

ADVERTISEMENT

இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, உலகத் தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

யார் இவர்? என்ன நடந்தது? விசாரணையில், பாதிக்கப்பட்டவர் தமிழ்நாட்டின் திருச்சியையைச் சேர்ந்த சபியுதீன் பக்கீர் முகமது (39) என்பது தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக, கடந்த 2024-ம் ஆண்டு மலேசியா சென்றிருக்கிறார் சபியுதீன். ஸ்ரீ கோம்பாக் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சமையல்காரராக வேலைக்குச் சேர்ந்துள்ளார். இதற்காக, வேலை அனுமதி (Work Permit) மற்றும் மருத்துவச் செலவுக்கெனப் பெரும் தொகையைத் தனது முதலாளியிடம் செலுத்தியுள்ளார்.

ஆனால், அந்த முதலாளி சபியுதீனுக்கு முறையாகச் சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றியதோடு, அவருடைய பாஸ்போர்ட்டையும் பிடுங்கி வைத்துக்கொண்டார். சம்பளமும் இல்லை, கையில் பாஸ்போர்ட்டும் இல்லை என்பதால் அவரால் வேலையை விடவும் முடியவில்லை; ஊருக்குத் திரும்பவும் முடியவில்லை. இதனால் கடந்த 6 மாதங்களாக வேலையின்றி, தங்குவதற்கு இடமின்றித் தெருவோரத்தில் வசித்து வந்துள்ளார். பசி, பட்டினியால் சோர்ந்து போய் வங்கி வாசலில் படுத்திருந்த போதுதான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

ADVERTISEMENT

வங்கி நிர்வாகம் விளக்கம்: சம்பவம் நடந்த இடமான ‘AmBank’ நிர்வாகம் இதற்கு வருத்தம் தெரிவித்துள்ளது. “தாக்குதல் நடத்தியவர்கள் வங்கியின் நேரடி ஊழியர்கள் அல்ல; அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட செக்யூரிட்டி ஏஜென்சியைச் சார்ந்தவர்கள். இருப்பினும், ஒரு மனிதரிடம் இப்படி நடந்துகொள்வது ஏற்க முடியாதது,” என்று வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவிக்கரம்: “என்னை அங்கிருந்து போகச் சொல்லியிருந்தால் நானே போயிருப்பேன். பசியாலும், மன அழுத்தத்தாலும் மயங்கிப் போயிருந்தேன்,” என்று கண்ணீருடன் கூறியுள்ளார் சபியுதீன்.

தற்போது, இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, டோனி லியான் (Tony Lian) என்ற சமூக ஆர்வலர் சபியுதீனை மீட்டு அடைக்கலம் கொடுத்துள்ளார். அவரது பாஸ்போர்ட்டை மீட்டுத் தரவும், அவர் பத்திரமாகத் தாய்நாடு திரும்பவும் தேவையான உதவிகளைச் செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிழைக்கப்போன இடத்தில் ஒரு தமிழருக்கு நேர்ந்த இந்த அவலம், மனிதநேயம் இன்னும் சாகவில்லை என்பதையே கேள்விக்குறியாக்கி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share