தமிழ்நாடு நடத்தும் 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
தொடர்ந்து திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களிலும் கேலோ விளையாட்டு போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
இதில் இந்தியா முழுவதுமிருந்து சுமார் 5,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். தொடக்கவிழா கடந்த ஜனவரி 19-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதல்முறையாக தமிழ்நாட்டில் நடத்தப்படும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் தடகளம், கால்பந்து, கபடி, கைப்பந்து, ஜூடோ, பளு தூக்குதல், ஸ்குவாஷ், வில்வித்தை, குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், ஹாக்கி, டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், யோகா, மல்யுத்தம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்தநிலையில் நேற்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற ஆடவருக்கான ரிதமிக் ஜோடி யோகாவில் தமிழகத்தை சேர்ந்த இரட்டையர்கள் சர்வேஷ், தேவேஷ் ஆகியோர் 127.89 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கம் வென்றனர்.
மகளிருக்கான ரிதமிக் ஜோடி பிரிவில் தமிழகத்தின் ஓவியா, ஷிவானி ஜோடி வெண்கலப்பதக்கம் வென்றது.
இதேபோல ஆடவருக்கான வாள்வீச்சு இறுதிப்போட்டியில் தமிழகத்தின் அன்பிலஸ் கோவின் 15-11 என்ற புள்ளிகள் கணக்கில் மணிப்பூர் வீரர் ஜெனித்தை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
கபடியை பொறுத்தவரை ஆடவர் அணி டெல்லியுடன் மோதி 39-36 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதியில் நுழைந்துள்ளது.
இதேபோல கபடியில் மகளிர் அணியினர் 41-32 என்ற கணக்கில் மகாராஷ்டிராவை வீழ்த்தி, அரையிறுதியில் அடியெடுத்து வைத்துள்ளனர்.
அடுத்தடுத்த பதக்கங்களால் கேலோ இந்தியா புள்ளிப்பட்டியலில் தமிழ்நாடு தற்போது 2 தங்கப்பதக்கங்களுடன் முதலிடம் பெற்றுள்ளது. 2-வது, 3-வது இடங்களில் மேற்கு வங்காளம், டெல்லி மாநிலங்கள் உள்ளன.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு… சர்வாதிகாரத்தை ஒழித்திடுவோம்: திமுக இளைஞரணி மாநாட்டு தீர்மானங்கள்!
”ராம ஜென்ம பூமிக்கு செல்வதில் மகிழ்ச்சி” அயோத்தி புறப்பட்டார் ரஜினிகாந்த்
