தமிழ்நாடு நடத்தும் 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் தற்போது சென்னை,திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
மொத்தமாக இதில் இந்தியா முழுவதுமிருந்து சுமார் 5,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு 6 தங்கப் பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
கடந்த ஜனவரி 2௦-ம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற ஆடவருக்கான ரிதமிக் ஜோடி யோகாவில் தமிழகத்தை சேர்ந்த இரட்டையர்கள் சர்வேஷ், தேவேஷ் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.
ஆடவருக்கான வாள்வீச்சு இறுதிப்போட்டியில், தமிழகத்தின் அன்பிலஸ் கோவின் மணிப்பூர் வீரர் ஜெனித்தை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

இதேபோல ஜனவரி 21-ம் தேதி நடைபெற்ற மகளிருக்கான பாரம்பரிய யோகா போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை எஸ்.ஹெச்.நவ்யா தங்கப் பதக்கம் வென்றார்.
அதே நாளில் நடைபெற்ற ஆடவருக்கான வாள்வீச்சு தனிநபர் சேபர் பிரிவில் தமிழ்நாட்டின் அர்லின் ஹரியானாவின் லக்சய் பட்சரை வீழ்த்தி, தங்கப் பதக்கம் வென்றார்.
நேற்று (ஜனவரி 22) சென்னை மேலக்கோட்டையூரில் நடைபெற்ற சைக்கிள் பந்தயத்தின் 500 மீட்டர் டைம் டிரையல் பிரிவில், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டாபிடாரத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி தங்கப் பதக்கம் வென்றார்.
இதேபோல மகளிருக்கான ஸ்பிரின்ட் பிரிவில் தன்யதா, ஸ்ரீமதி, தமிழரசி, சுவேதா ஆகியோரை உள்ளடக்கிய தமிழக அணி தங்கப் பதக்கம் வென்றது.

இன்று (ஜனவரி 23) நடைபெற்ற ஸ்குவாஷ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த பூஜா ஆர்த்தி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
இதையடுத்து கேலோ இந்தியா பதக்கப்பட்டியலில் 7 தங்கம், 2 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தமாக 15 பதக்கங்களுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
இதேபோல இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிராவும், மூன்றாவது இடத்தில் ஹரியானாவும், நான்கு மற்றும் ஐந்து இடங்களில் முறையே டெல்லி மற்றும் குஜராத் மாநிலங்களும் உள்ளன.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழ்நாடு: 2024 மக்களவைத் தேர்தல் தேதி எப்போது?
’மய்யத்தின் 2 நிபந்தனைகள்… ஏற்காவிட்டால் தனித்துப்போட்டி’ : மவுரியா
