தமிழக அரசின் வழக்கில் ஆளுநர்களுக்கு காலக்கெடு விதித்தது குறித்து ஜனாதிபதி 14 கேள்விகளை எழுப்பி விளக்கம் கேட்டிருந்தார். இந்த கேள்விகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஜூலை 22-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது. Tamil Nadu Govt Case
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதி உள்ளிட்டோர் மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடுவை நிர்ணயம் செய்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்புக்கு எதிராக துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு, இந்த விவகாரத்தில் 14 கேள்விகளை எழுப்பி உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
ஜனாதிபதி எழுப்பிய கேள்விகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பிஆர் கவாய், நீதிபதிகள் விக்ரம் நாத், சூர்யகாந்த், நரசிம்மா, அதுல் சந்துருக்கர் உள்ளிட்டோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, ஜூலை 22-ந் தேதி விசாரணை நடத்த உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
