அரசு அலுவலகங்களில் கழிவுகள் சேகரிப்பு… மறுசுழற்சி செய்ய நடவடிக்கை!

Published On:

| By Selvam

தூய்மை இயக்கம் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவகங்களில் கழிவுகள் சேகரித்து மறுசுழற்சி அல்லது மீள்பயன்பாடு மேற்கொள்ளும் முன்னெடுப்பு இன்று (ஜூன் 5) மேற்கொள்ளப்படுகிறது. tamil nadu government office cleaning

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“தமிழ்நாடு அரசு எடுத்து வரும் பல முன்னெடுப்புகளில் தற்போது கழிவு மேலாண்மையில் ஒரு சிறப்பு முன்னெடுப்பாக தூய்மை இயக்கத்தினை தொடங்கி அதனை செயல்படுத்திட தூய்மை தமிழ்நாடு நிறுவனம் (CTCL) என்ற அமைப்பு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் செயல்பாட்டின் முதற்கட்டமாக, உலக சுற்றுச்சூழல் தினமான இன்று மாநிலம் முழுவதும் 1,077 அரசு அலுவலகங்களை சுத்தம் செய்யும் நோக்கில் அவ்வலுவலக கழிவுகளை சேகரிக்கும் மாபெரும் முன்முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.

இன்று தலைமைச் செயலகம், பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி இயக்குநகரங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் ஆகிய இடங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள், மின்னணு கழிவுகள், உலோகக் கழிவுகள், காகித கழிவுகள், கண்ணாடி கழிவுகள், பயன்படுத்த இயலாத மரத் தளவாடங்கள் போன்ற பலவிதமான கழிவுகளைச் சேகரிக்கும் நிகழ்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

கழிவுகள் நிலப்பரப்பில் குவிக்கப்பட்டு சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் பொருட்டு இந்த முன்னெடுப்பில், சேகரிக்கப்பட்ட கழிவுகள் அனைத்தும் உயர் தொழில்நுட்பத்தின் மூலம் சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு உட்பட்டு மீள்பயன்பாடு மற்றும் மறுசுழற்சி செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்காக மேற்குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அலுவலகங்களிலும் ஜூன் 4-ஆம் தேதி தூய்மை நடை (Thooimai Walk) உரிய அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்யவேண்டிய கழிவுகளை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களின் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள், நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள அலுவலகங்களின் அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share