”சொந்த மாநில மக்களை அகதிகளாக்கும் தமிழக அரசு” : டிடிவி தினகரன் கண்டனம்!

Published On:

| By christopher

"Tamil Nadu government making refugees of native state" : TTV Dhinakaran condemned!

சென்னைக்கு அடுத்தபடியாக சுமார் 5 ஆயிரத்து 746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்டிவருகின்றன.

இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாட்டை விட்டு வெளியேறி, ஆந்திர மாநில அரசிடம் அகதிகளாக தஞ்சம் அடைய சித்தூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க போவதாக கிராம மக்களும், போராட்ட குழுவினரும் சமீபத்தில் அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து தமிழக அரசை விமர்சித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (ஜூன் 18) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தை விட்டு வெளியேறும் பரந்தூர் பகுதி மக்கள் – சொந்த மாநில மக்களை அகதிகளாக்கும் தமிழக அரசின் பிடிவாதப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டிக்கும் விதமாக பரந்தூர், ஏகனாபுரம் பகுதி மக்கள் தமிழகத்தை விட்டு வெளியேறி ஆந்திராவில் இடம்பெயர முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு வெளியான நாளில் தொடங்கி இன்று வரை எண்ணிலடங்கா போராட்டங்களை முன்னெடுத்த பொதுமக்களின் உணர்வுகளை மதிக்காமல் பிடிவாதப் போக்குடன் செயல்படும் தமிழக அரசின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது.

விளை நிலங்கள், நீர்நிலைகள், குடியிருப்புகளை அழித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு சீர்குலைக்கும் பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நிர்வாகம் காட்டும் முனைப்பு, சுதந்திர இந்தியாவில் தங்களை ஆட்சி செய்யும் மாநில அரசை எதிர்த்து அம்மாநில மக்களே அகதிகளாக வெளியேறும் அளவிற்கு அவலநிலையை முதல் முறையாக உருவாக்கியுள்ளது.

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பாணையை திரும்பப் பெறுவதோடு, தமிழகத்தை விட்டு வெளியேற முடிவு செய்திருக்கும் பரந்தூர் பகுதி மக்களையும் விவசாயிகளையும் உடனடியாக அழைத்துப் பேசி உரிய தீர்வு காண முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

Stock Market : புதிய உச்சம் தொட்ட ஏர்டெல், மஹிந்திரா

ஆண் குழந்தையின் பெயரை வெளியிட்ட அமலாபால்… வீடியோ வைரல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share