அமெரிக்க வரி விதிப்பால் தமிழக ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான வரியை 50 சதவிகிதம் வரை உயர்த்தி உள்ளார். இந்த வரி உயர்வு நேற்று (ஆகஸ்ட் – 27) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவிற்கு அதிகம் ஏற்றுமதி செய்து வரும் திருப்பூர் பின்னலாடை, ஜவுளி தொழில் துறையினர் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் டிரம்பின் வரி அதிகரிப்பு நடவடிக்கையால் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ” அமெரிக்க வரிவிதிப்பு 50% ஆக உயர்ந்தது தமிழ்நாட்டின் ஏற்றுமதியை கடுமையாக பாதித்துள்ளது, குறிப்பாக திருப்பூர் ஜவுளி மையத்தை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் சுமார் 3,000 கோடி ரூபாய் வர்த்தக பாதிப்பை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான வேலைகள் ஆபத்தில் உள்ளன.
இதனால் உடனடியாக நமது தொழில் மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் நிவாரணங்கள் வழங்குவதோடு, பாதுகாக்க கட்டமைப்பு சீர்திருத்தங்களையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என நான் கேட்டு கொள்கிறேன்” என தெரித்துள்ளார்.
