தமிழகத் தேர்தல்: 92,300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்!

Published On:

| By Balaji

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு 92,300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாக தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே வேளையில் தமிழகத் தேர்தல் ஆணையம் சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளைத் துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT

அந்த வகையில் தேர்தலில் வாக்களிக்கப் பயன்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதனை செய்து தேர்தலுக்கு தயார்ப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்கனவே செலுத்தப்பட்ட வாக்குகளின் பதிவுகள் அனைத்தும் அழிக்கப்படும்.

இதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடுத்து வரும் தேர்தலுக்குப் பயன்படுத்தும் வகையில் தயார் நிலையில் உள்ளதா என்பது குறித்து முதற்கட்ட சோதனை மேற்கொள்ளப்படும். இது தொடர்பான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT

தற்போது வரை 26 மாவட்டங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதற்கட்ட பரிசோதனை முடிவு பெற்றதாகவும், தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு 92,300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மேலும் செய்தியாளர்களிடம் பேசிய தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, “தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வரும் பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதற்கட்ட பரிசோதனை முடிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

** – ராஜ்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share