ADVERTISEMENT

வயநாடு நிலச்சரிவு: தமிழக காங்கிரஸ் ரூ.1 கோடி நிவாரண நிதி!

Published On:

| By Selvam

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நேற்று (ஜூலை 31) இரவும், அதிகாலையிலும் கொட்டித்தீர்த்த வரலாறு காணாத அதி கனமழையின் காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவின் பாதிப்பால் இதுவரை 222 பேர் உயிரிழந்தனர்.

இந்தநிலையில், வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மாநில முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (ஜூலை 31) தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ADVERTISEMENT

“நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு கேரள மாநில அரசு நிர்வாகம் ராணுவ உதவிக்குழு மற்றும் இதர மாநில பேரிடர் மீட்புக்குழுக்களோடு மீட்புப் பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பேரிடரில் உயிரிழந்தவர்களுக்கும், படுகாயமடைந்தவர்களுக்கும் ஒன்றிய, மாநில அரசுகள் இழப்பீட்டுத்தொகை அறிவித்திருக்கிறது.

ADVERTISEMENT

ஆனால் இந்த எதிர்பாராத இயற்கை சீற்றத்தின் காரணமாக வரலாறு காணாத பேரிழப்பை வயநாடு மக்கள் சந்தித்திருப்பது மிகவும் வேதனையை தருகிறது. இந்த நிலச்சரிவின் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

வயநாட்டில் ஏற்பட்ட இந்த பயங்கர நிலச்சரிவில் இரண்டு தமிழர்கள் உயிரிழந்திருப்பதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன. அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் இழப்பீட்டுத்தொகை வழங்கியதோடு கேரள மாநில அரசுக்கு ரூ. 5 கோடி நிவாரணத்தொகை வழங்கியிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக முழு மனதோடு வரவேற்கிறேன்.

அண்டை மாநிலத்தில் உள்ள நமது சகோதரர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட துயரமான நிகழ்வை தேசிய பேரிடராக கருதி ஒன்றிய அரசு அதற்கு தகுந்த நிதி உதவி செய்வதோடு, இந்திய ராணுவத்துணையோடு முழு வீச்சில் தேவையான நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவின் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிவாரணம் வழங்க தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக ரூ.1 கோடி கேரள முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு தலைவர் ராகுல்காந்தி மூலமாக காசோலை வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கேரள மாநில அரசு மற்றும் பேரிடர் மீட்புக்குழு எடுக்கும் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு வயநாடு மாவட்டத்திற்கு அருகில் உள்ள நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், உதகமண்டல சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினருமாகிய கணேஷ் ஏற்பாட்டில் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  80 காங்கிரஸ் நிர்வாகிகள் கொண்ட மீட்புக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பேக் அடித்த பிரசாந்த்: ‘அந்தகன்’ ரிலீஸ் தேதி மாற்றம்… இதுதான் காரணமா?

ஆளுநர் பதவி நீட்டிப்பா? நான் ஜனாதிபதி இல்லை… ஸ்டாலின் பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share