தமிழ்நாடு அரசு வழக்கின் உச்சநீதிமன்றத் தீர்ப்பை முன்வைத்து 14 கேள்விகளை எழுப்பி ஜனாதிபதி திரவுபதி முர்மு விளக்கம் கேட்ட விவகாரத்தில் 8 மாநிலங்களின் முதல்வர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார். Tamil Nadu CM MK Stalin Writes to 8 Chief Ministers on President’s 14 Questions against Supreme Court Verdict
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை அளித்தது. இந்தத் தீர்ப்பில், சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதாக்கள் மீது ஆளுநர், ஜனாதிபதி முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயித்திருந்தது உச்சநீதிமன்றம். மேலும் உச்சநீதிமன்றம் தமது சிறப்பதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆளுநர் ஆர்.என்.ரவியால் கிடப்பில் போடப்பட்ட தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். மேலும் இந்தத் தீர்ப்பை முன்வைத்து 14 கேள்விகளை எழுப்பி உச்சநீதிமன்றத்திடம் விளக்கமும் கேட்டிருந்தார் ஜனாதிபதி திரவுபதி.
ஜனாதிபதி திரவுபதி முர்முவின் இந்த நடவடிக்கையை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது, ஜனாதிபதி கேள்வி எழுப்பிய விவகாரத்தை சுட்டிக் காட்டி மாநில உரிமைகளைப் பாதுகாக்க அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என 8 மாநிலங்களின் முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார்.
கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, ஜார்க்கண்ட், பஞ்சாப், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம் ஆகிய 8 மாநிலங்களின் முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இந்தக் கடிதத்தை அனுப்பி உள்ளார். அக்கடிதத்தில், உச்சநீதிமன்றத்துக்கு விளக்கம் கேட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு குறிப்பு அனுப்பியதை அனைத்து மாநிலங்களின் முதல்வர்களும் கடுமையாக எதிர்க்க வேண்டும்; இந்திய அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும்; இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு, மாநிலங்களின் சுயாட்சியைப் பாதுகாக்க அனைத்து மாநிலங்களின் அரசுகளும் ஒருங்கிணைந்து ஒரு சட்ட உத்தியை உருவாக்கி அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக மே 15-ந் தேதி தமது எக்ஸ் பக்கத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டிருந்தார். அதில், தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டிக்கும் வகையில், குடியரசுத் தலைவர் சில குறிப்புகளை வெளியிட்டிருக்கிறார். இந்த நடவடிக்கை, உச்சநீதிமன்றத்திற்கு நேரடி சவால் விடுவதாக உள்ளது.

மாநில அரசின் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுக்க காலக்கெடு விதிப்பதை, ஒன்றிய அரசு எதிர்ப்பது ஏன்? மாநில அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல், ஆளுநர் முடக்குவதை சட்டப்பூர்வமாக்க பா.ஜ.க முயற்சிக்கிறதா? பா.ஜ.க அல்லாத கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை முடக்க நினைக்கிறதா ஒன்றிய அரசு? ஒன்றிய அரசின் ஏஜெண்டுகளாக செயல்படும் ஆளுநர்கள் மூலம் மாநில அரசுகளை கட்டுப்படுத்தும் முயற்சியை, ஒன்றிய பா.ஜ.க அரசு முன்னெடுத்துள்ளது. ஆனால், அரசியலமைப்பு சட்டத்திற்கு, இறுதி விளக்கம் அளிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கே உள்ளது.
மாநிலங்களுக்கு, இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள அதிகாரப்பகிர்வை சீர்குலைக்கும் நோக்குடன் ஒன்றிய அரசின் குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்றத்திற்கு கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்த நடவடிக்கை, மாநில சுயாட்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதையும் எதிர்த்து தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! என கூறியிருந்தார்.