பிகார் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதீஷ் குமாரும் , துணை முதல்வராக ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவும் இன்று ( ஆகஸ்ட் 10 ) பதவியேற்றுக் கொண்டனர்.
பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சித்தலைவர் நிதீஷ் குமார், தனது முதல்வர் பதவியை நேற்று ( ஆகஸ்ட் 9 ) ராஜினாமா செய்தார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் , காங்கிரஸ் , இடது சாரிகள் உள்ளிட்ட எதிர் கட்சிகள் நிதீஷ் குமாருக்கு ஆதரவளித்த நிலையில் , பிகார் மாநில முதல்வராக இன்று ( ஆகஸ்ட் 10 ) நிதீஷ் குமார் பதவியேற்றார்.
பாட்னாவில் உள்ள ஆளுனர் மாளிகையில் முதல்வராக நிதீஷ் குமாருக்கும் , துணை முதல்வராக தேஜஸ்விக்கும் ஆளுனர் ஃபாகு செளஹா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், பிகார் மாநில முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள முதல்வர் நிதீஷ் குமாருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் , ”பிகார் முதல்வராக பதவியேற்றுள்ள நிதீஷ் குமாருக்கும் , துணை முதல்வராக பொறுப்பேற்று உள்ள எனது சகோதரர் தேஜஸ்வி யாதவிற்கும் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.
நாட்டின் மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தை காக்கும் வகையில் , உரிய நேரத்தில் பிகாரில் மீண்டும் மகா கூட்டணி அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்