நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 – 26-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 14) தாக்கல் செய்து வருகிறார். Tamil Nadu budget combined
இதில் கூட்டு குடிநீர் திட்டம் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு தங்கம் தென்னரசு பேசும்போது,
“தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கீழ் உள்ள, நாற்பது ஆண்டுகளுக்கு மேலான கூட்டுக் குடிநீர்த் திட்டங்களைப் புதுப்பிக்கவேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது.
செயல்திறன் குறைந்த பழைய மின் இறைப்பான்கள் மற்றும் குழாய்கள் ஆகியவற்றை மாற்றிடவும், தேவைப்படும் இடங்களில் நீர் ஆதாரங்களைப் புதுப்பித்து கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை மேம்படுத்தவும், இந்த ஆண்டு 675 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 102 கூட்டுக் குடிநீர்த் திட்டங்களில் பணிகள் மேற்கொள்ளப்படும். இதன்மூலம், அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு, இத்திட்டப் பகுதிகளில் குடிநீர் வழங்கல் சீராக நடைபெறுவது உறுதி செய்யப்படும்.

எதிர்வரும் 2025-26 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம் முன்னுரிமை அடிப்படையில் கீழ்க்கண்ட கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை நிறைவேற்றிடும்.
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை மாநகராட்சி, அறந்தாங்கி நகராட்சி மற்றும் 526 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில், கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஒன்று 1,820 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4.07 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை மற்றும் சீர்காழி நகராட்சிகள், தரங்கம்பாடி, மணல்மேடு மற்றும் குத்தாலம் பேரூராட்சிகள் மற்றும் 1,042 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில், கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஒன்று 2,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 11.22 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சி மற்றும் 493 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில், கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஒன்று 864 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5.64 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 639 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஒன்று
370 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1.3 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 1,252 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஒன்று 890 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4.91 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 214 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஒன்று 374 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 92,000 மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 138 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஒன்று 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 76,000 மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும்.
இந்த வரவு, செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 26,678 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். Tamil Nadu budget combined