தமிழ்நாடு பட்ஜெட் 2025 : முக்கிய அம்சங்கள் என்னென்ன? 

Published On:

| By Kavi

Tamil Nadu Budget 2025 key features

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14)2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். Tamil Nadu Budget 2025 key features

அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்களை இங்கே பார்க்கலாம்…

ADVERTISEMENT

1.அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஈட்டிய விடுப்பு நாட்களில் 15 நாட்கள் வரை, 01-04-2026 முதல் சரண் செய்து பணப்பலன் பெறுவதற்கான நடைமுறை மீண்டும் செயல்படுத்தப்படும்.

2.கலை, அறிவியல், பொறியியல், வேளாண்மை மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளிலும் பயின்று வரும் மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்பச் சாதனங்களை வழங்கிடத் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு, அவரவர் விருப்பத்தின் அடிப்படையில், ஒவ்வொருவருக்கும் கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும்.

ADVERTISEMENT

3.ஒரு லட்சம் மகளிரை தொழில்முனைவோராக உயர்த்திடும் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் 20 சதவீத மானியத்துடன் 10 லட்சம் ரூபாய் வரை வங்கிக் கடன் பெற்று, மகளிர் பல்வேறு தொழில்கள் தொடங்கிட உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், விற்பனைக்கான ஆலோசனைகளும் வழங்கப்படும்.

4.வரும் 01-04-2025 முதல், 10 லட்சம் ரூபாய் வரையிலான மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையாச் சொத்துகள், பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால், அத்தகைய ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும்.

ADVERTISEMENT

5.மாநிலப் பேரிடர் நிவாரண நிதியின் கீழ் அதிநவீன வசதிகளுடன் கூடிய தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் ஒன்று 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னையில் அமைக்கப்படும்.

6.சென்னை மாநகராட்சி, மதுரை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், வேலூர், சேலம், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகள் ஆகிய 11 நகரங்களுக்கெனத் தனியே வெப்ப அலை செயல்திட்டங்கள் தயாரிக்கப்படும்.

7.சென்னை கோவை, திருச்சி, மதுரை, தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய பகுதிகளிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், நகரெங்கும் கண்காணிப்புக் கேமராக்கள், முக அடையாளம் காணும் மென்பொருள் அமைப்பு, தானியங்கி வாகன எண் கண்டுபிடிக்கும் கருவி, ஆளில்லா வான்கலம் (Drones) அடிப்படையிலான கண்காணிப்பு மற்றும் நுண்ணறிவு அடிப்படையிலான காணொலி பகுப்பாய்வு  அம்சங்களை உள்ளடக்கிய திட்டம் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

8.முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு கூடுதலாக 3,000 வீடுகள் 206 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும்.

9.டிஎன்பிஎஸ்சி மூலம் , 40,000 பணியிடங்களை வரும் நிதி ஆண்டிலேயே நிரப்பும் பொருட்டு உரிய நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

10.200 கோடி ரூபாய் மதிப்பில் அதிக விபத்து நடக்கும் பகுதிகளில், குறுகிய வளைவுகள் மேம்படுத்தப்படும்.

11.சென்னையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலைக் கையாளும் விதமாக, சென்னை நகரின் கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூரிலிருந்து உத்தண்டி பகுதி வரை 14.2 கி.மீ நீளத்திற்கு நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை 2,100 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (TANSHA) மூலம் அமைக்கப்படும்.

12.விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

13.கால்நடை இனப்பெருக்க கொள்கை’ (Bovine Breeding Policy) உருவாக்கப்படும்.

14.அதிக முதலீடுகளை ஈர்க்கவும், சுற்றுலாத் துறையில் ஈடுபடும் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கவும், தமிழ்நாடு சுற்றுலா ஊக்குவிப்பு வசதிச் சட்டம் ஒன்றினை நமது அரசு கொண்டு வரும்.

15.பழமை வாய்ந்த பள்ளிவாசல்களையும், தர்காக்களையும் பழுதுபார்ப்பதற்கும் சீரமைப்பதற்கும் வரும் நிதியாண்டில் 10 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.

15.முதுநிலை அல்லது ஆராய்ச்சிப் படிப்புகளைத் தொடரும் மாணவர்களின் நிதிச் சுமையைக் குறைத்து. திறமையான மாணவர்கள் உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் வாய்ப்பை வழங்க, ‘அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ், 2025-26 ஆம் நிதியாண்டில், 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

16.தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரை 21 கி.மீ. தூரத்திற்கும், கலங்கரை விளக்கத்திலிருந்து உயர் நீதிமன்றம் வரை 6 கி.மீ. தூரத்திற்கும் மெட்ரோ இரயில் வழித்தடம் நீட்டிப்பு செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படும்.

17.இந்த வரவு-செலவுத் திட்டத்தில் மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்காக 3,600 கோடி ரூபாய், மாணவர்களுக்கான பேருந்துக் கட்டண மானியத்திற்காக 1,782 கோடி ரூபாய், டீசல் மானியத்திற்காக 1,857 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

18.அலையாத்திக் காடுகள் பாதுகாப்பு, நவீன மீன்பிடி நடைமுறைகள் அறிமுகம் போன்ற முக்கியப் பணிகளை மேற்கொள்ளும் வகையில், ‘கடல்சார் வள அறக்கட்டளை (Marine Resource Foundation) ஒன்று 50 கோடி ரூபாய் தொடக்க நிதியுடன் உருவாக்கப்படும்.

19.தமிழ்நாட்டின் நீர்வளத்தினை பாதுகாத்து மேம்படுத்திடும் பொருட்டு, வரும் நிதியாண்டு முதல் ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாட்டுத் திட்டம்’ 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

20.சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், தாம்பரம் மற்றும் ஆவடி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும், 30 இடங்களில், ஒரு முதல்வர் படைப்பகம் தலா ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

21.தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதித் திட்டத்திற்கு 2025-26 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

22.குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில்,  காஞ்சிபுரம் மாவட்டம்-திருமுடிவாக்கம், விழுப்புரம் மாவட்டம்-சாரம் மற்றும் நாயனுர், கரூர் மாவட்டம்-நாகம்பள்ளி, திருச்சிராப்பள்ளி மாவட்டம்-சூரியூர், மதுரை மாவட்டம்-கருத்தபுளியம்பட்டி, இராமநாதபுரம் மாவட்டம்- தனிச்சியம், தஞ்சாவூர் மாவட்டம்- நடுவூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டம்-நரசிங்கநல்லூர் ஆகிய 9 இடங்களில் மொத்தம் 398 ஏக்கர் பரப்பளவில் 366 கோடி ரூபாய் மொத்த திட்ட மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டைகள் தமிழ்நாடு சிறுதொழில் முன்னேற்றக் கழகத்தால் (SIDCO) உருவாக்கப்படும். இதன் மூலம் சுமார் 17,500 நபர்கள் வேலை வாய்ப்பினைப் பெறுவர்.

23.ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று அமைக்கப்படும்.

24.கோவை-சூலூர் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவிலும், பல்லடம் அருகே 100 ஏக்கர் பரப்பளவிலும் செமி கண்டக்டர் உற்பத்திக்கான இயந்திரத் தொழிற் பூங்காக்கள் அமைக்கப்படும். 

25.ஓசூரில் டைடல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா,  விருதுநகரில்  புதிய மினி டைடல் பூங்கா,  ஓசூரில் அறிவுசார் பெருவழித்தடம், மதுரை, கடலூரில் காலணி  தொழிற்பூங்கா,   திருச்சியில் 250 ஏக்கர் பரப்பளவில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழிற்பூங்கா ஆகியவை அமைக்கப்படும்.

26.இந்த பட்ஜெட்டில்  தேசிய நலவாழ்வுக் குழுமம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு 2,754 கோடி ரூபாயும், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்திற்கு 1,092 கோடி ரூபாயும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு 1,461 கோடி ரூபாயும், அவசர ஊர்தி சேவைகளுக்கு 348 கோடி ரூபாயும்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

27.தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 2,000 இணையம் சார்ந்த சேவைப்பணித் தொழிலாளர்களுக்கு புதிதாக இருசக்கர மின் வாகனம் (e-Scooter) வாங்கும் பொருட்டு தலா 20,000 ரூபாய் மானியமாக வழங்கும் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும்.

28.பள்ளிப் பாடத்திட்டத்தில் சதுரங்க விளையாட்டினைச் சேர்த்திடும் விதமாக, உடற்கல்விப் பாடத்திட்டம் உரிய வகையில் மாற்றியமைக்கப்படும்.

29.2025-26 ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கு 2,500 கோடி ரூபாய் அளவிற்கு பல்வேறு வங்கிகள் கல்விக் கடன் வழங்குவதை இந்த அரசு உறுதி செய்திடும்.

30. 2025-26 ஆம் ஆண்டில் 1,721 முதுகலை ஆசிரியர்களும் 841 பட்டதாரி ஆசிரியர்களும் நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்படுவார்கள்.

31.குன்னூர், நத்தம், ஆலந்தூர், விக்கிரவாண்டி, செய்யூர், மானாமதுரை, முத்துப்பேட்டை, திருவிடைமருதூர், பெரம்பலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் 10 புதிய கலை அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும்.

32.மூத்த குடிமக்களின் முழுமையான பராமரிப்பிற்கென, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாநகராட்சிகளில் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 25 அன்புச்சோலை’ மையங்கள் அமைக்கப்படும்.

33.மகளிர் சுய உதவிக்குழு திட்டத்தில் புதிதாக 10,000 சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் ரூ.37,000 கோடி வங்கிக் கடன் வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

34.மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு வரவு செலவு திட்டத்தில் 13,807 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

35.திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, தென்காசி, திருவள்ளூர்,  மயிலாடுதுறை,  புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் கூட்டு குடிநீர் திட்டம் மேற்கொள்ளப்படும்.

36.தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 6,483 கி.மீ. நீளமுள்ள சாலைகள் 3,750 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தின் கீழ், குறிப்பாக 570 கி.மீ. நீளமுள்ள சாலைகள் 486 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சியிலும், கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் 130 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

37.முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டு 6,100 கிலோமீட்டர் நீளமுள்ள கிராமச் சாலைகள் 2,200 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

38.கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில்  2025-26 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய வீடுகள் 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டும் பணிகள் தொடங்கப்படும்.

39.ஈரோடு மாவட்டத்தில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் நொய்யல் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

40.ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் நாவாய் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

41. ரூ.40 கோடியில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஐம்பொன் மற்றும் செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் அமைக்கப்படும். Tamil Nadu Budget 2025 key features

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share