நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (பிப்ரவரி 19) தாக்கல் செய்த தமிழ்நாடு பட்ஜெட்டில் சென்னை மாநகருக்கு என பிரத்யேக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதில், “சென்னை பெருநகர மாநகராட்சியில் நவீன, உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குவதற்கும் 42 விரிவாக்கப் பகுதிகளில் கட்டமைப்பை மேம்படுத்தவும் “சிங்காரச் சென்னை 2.0” திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியது. இதுவரை, கடந்த 3 ஆண்டுகளில் 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1183 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்கு வரும் நிதியாண்டு 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
விரைவான நகரமயமாக்கலின் விளைவாக, சென்னை மாநகரத்தில் வாகனப் போக்குவரத்து பன்மடங்காக அதிகரித்துள்ளதால் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, சென்னையில் அதிகப் போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலைகள் அகலப்படுத்துவதற்காகக் கண்டறியப்பட்டுள்ளன.
அதன் முதற்கட்டமாக, புதிய ஆவடி சாலை, பேப்பர் மில்ஸ் சாலை மற்றும் செம்பியம் ரெட்ஹில்ஸ் சாலைகளை 8 மீட்டராகவும்,டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை மற்றும் கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலைகளை 30.5 மீட்டராகவும் அகலப்படுத்தும் திட்டம், சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
சிங்காரச் சென்னையை உருவாக்கும் நோக்கோடு சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்புடன் கூடிய நகர்புறப் பொதுச் சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம் போன்ற நவீன சமூகக் கட்டமைப்பு வசதிகளை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் 104 கோடி ரூபாய் செலவில் மேற்கொண்டு வருகிறது.
மேலும், சென்னை கடற்கரையோரப் பகுதிகளை அழகுற சீரமைத்து மேம்படுத்திடும் நோக்கோடு கோவளம், எண்ணூர், பெசன்ட் நகர் ஆகிய கடற்கரைப் பகுதிகள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வசதிகளுடன் மெருகூட்டி அழகுபடுத்தப்படும்” என்று அறிவித்துள்ளார் நிதியமைச்சர்.
மேலும், “தமிழ்நாட்டில் நகர்ப்புரங்களில் வசிக்கும் மக்களுக்குத் தூய்மையான மற்றும் பசுமையான வாழிடச் சூழலை உருவாக்கிட இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. சென்னையில் உள்ள முக்கிய நீர்வழிகளான அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் மற்றும் கொசஸ்தலையாறு ஆகியவற்றைச் சீரமைத்திட இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
அதன் முதற்கட்டமாக சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம், செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கூடுவாஞ்சேரியிலிருந்து தாம்பரம், திருநீர்மலை, மணப்பாக்கம், ஆலந்தூர், சைதாப்பேட்டை பகுதிகள் வழியாகப் பாய்ந்து, வங்கக்கடலில் கலக்கும் அடையாறு நதியை மீட்டெடுத்து அழகுறச் சீரமைக்கும் திட்டம், அரசு தனியார் பங்களிப்புடன் சுமார் 4500 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
அடையாறு ஆற்றின் இரு கரைகளிலும் 70 கிலோமீட்டர் தூரத்திற்கு கழிவுநீர்க் குழாய்கள் அமைத்து கழிவுநீர் வெளியேறுவதற்கு ஏற்ற மாற்று வழிகளை அமைப்பது, நாள் ஒன்றிற்கு 110 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட 14 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், ஆற்றின் கரையில் மக்களின் மனம் கவரும் வகையில் நான்கு பூங்காக்கள் அமைத்தல் மற்றும் நதிக்கரை நெடுக பசுமைப் பரப்புகளை அதிகரிப்பது போன்ற சிறப்பு அம்சங்களை கொண்ட இத்திட்டம் விரைவில் தொடங்கப்பட்டு 30 மாத காலகட்டத்தில் பணிகள் நிறைவு செய்யப்படும்.
சைதாப்பேட்டை முதல் திரு.வி.க. பாலம் வரையிலான பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 15மாதங்களுக்குள்ளாகவே இப்பணிகள் முடிக்கப்படும்” என்றும் அறிவித்துள்ளார் நிதியமைச்சர்.
–வேந்தன்
TN Budget : கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க 17 கோடி ஒதுக்கீடு!