தமிழ்நாட்டில் 5-வது கட்டமாக, அனைத்து நகரப்புறங்களிலும் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மொத்தம் 2,429 பள்ளிகளில், இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “குழந்தைகளுடன் இணைந்து காலை உணவு சாப்பிட்டதால் குழந்தைகளைப் போல எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது. இன்றைய நாள் என் மனதுக்கு நிறைவான நாள்.. மகிழ்ச்சிக்குரிய நாள்.
எப்படி நீங்கள் நாள் முழுவதும் ஆக்டிவாக இருப்பீர்களோ.. அதுபோலவே நானும் இன்றைய நாள் முழுவதும் ஆக்டிவாக இருப்பேன். இந்தத் திட்டத்தில் 20 லட்சம் குழந்தைகள் சாப்பிடுகிறார்கள் என்றால் இதைவிட மகிழ்ச்சியானது என்ன இருந்துவிடப்போகிறது.
அறிவை வழங்குவதாக மட்டும் கல்வி இருக்க கூடாது. அது வயிற்று பசியையும் போக்க வேண்டும். நீதி கட்சியின் ஆட்சியில் சென்னை மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக காமராஜர் ஆட்சியில் மதிய உணவு திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. இதன் தொடர்ச்சியாக காலை உணவு திட்டத்தை திராவிட மாடல் அரசு தொடங்கியது.
காலை உணவு திட்டம் தொடங்க காரணம்
இந்த திட்டத்தை தொடங்க காரணம் நான் முதலமைச்சராக பதவியேற்ற பின் சென்னை அசோக் நகர் மகளிர் பள்ளிக்கு சென்ற போது காலையில் என்ன சாப்பிட்டீர்கள் என்று மாணவிகளிடம் கேட்டேன். அதற்கு நிறைய குழந்தைகள் சாப்பிடவில்லை என்றனர். சிலர் டீ, பன் சாப்பிட்டேன் என்றனர். இதை மனதில் வைத்து தான் காலை உணவு திட்டம் என்பதை அரசின் கொள்கையாக அறிவித்தேன்.
2022ம் ஆண்டு அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ல் மதுரை மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தேன். முதல் கட்டமாக 1,545 பள்ளிகளில் 1,14,095 மாணவர்கள் பயனடைந்தனர். பிறகு 25.8.2023ல் கலைஞர் பிறந்த திருக்குவளையில் எல்லா அரசு தொடக்க பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவாக்கப்பட்டது. 2024ல் காமராஜர் பிறந்த நாளில் ஊரக பகுதிகளில் செயல்படும் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகளுக்கு இந்த திட்டம் விரிவாக்கப்பட்டது. இதுவரை 17 லட்சம் மாணவ மாணவிகள் பயன்பெற்று வந்தனர்.
இனி நகர் பகுதிகளில் செயல்படும் 2,429 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்வதால் கூடுதலாக 3,06,000 மாணவர்கள் பயன்பெற உள்ளனர். இனி தமிழகத்தில் செயல்படும் 37 ஆயிரத்து 416 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தினமும் காலையில் சுவையான சத்தான உணவுகளை சாப்பிட்டுவிட்டு வகுப்புகளுக்கு செல்ல உள்ளனர்.
செலவு அல்ல.. சமூக முதலீடு!
ஆண்டுக்கு 600 கோடி மதிப்பில் இந்த திட்டம் செயல்படுகிறது. ஆனால் இது செலவு அல்ல.. சூப்பரான சமூக முதலீடு! எதிர்காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பல மடங்கு லாபத்தை தமிழ்ச் சமுதாயத்திற்கு தரப்போகும் முதலீடு இது. மாணவச் செல்வங்களின் திறமை, அறிவு, ஆற்றல் மீது நம்பிக்கை வைத்து தமிழ்நாடு அரசு இந்த முதலீட்டை செய்கிறது.
நீங்கள் எல்லோரும் நன்றாக படித்து முன்னேறி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பணியாற்றினால், அதுதான் இந்த திட்டத்தின் உண்மையான வெற்றி. இனி பள்ளிக்கு வரும் குழந்தைகள் பசி காரணமாக வாடிய முகத்தோடும் இருக்க மாட்டார்கள். புன்னகையோடும், நம்பிக்கையோடும், ஆர்வத்தோடும்,சுறுசுறுப்பும் நிரம்பிய முகங்களை இனி பார்க்கபோகிறோம் என்பதை இறுமாப்போடும் சொல்லாம்.
காலை உணவு திட்டத்தை நானே நேரடியாக கண்காணித்து வருகிறேன். இத்திட்டத்தால் மாணவர்களின் கல்வி கற்கும் திறன் அதிகரிப்பு, வருகைப் பதிவு உயர்வு, நோய்த்தொற்று ஏற்படுவதும் குறைந்துள்ளது.
மாநில திட்டக்குழுவின் ஆய்வு முடிவுகளும் இதை காட்டும் வகையில் உள்ளது. பல நாடுகளில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளன, இதுதான் நம் சாதனை. எல்லா துறைகளிலும் தமிழ்நாட்டை நம்பர் 1 ஆக்குவதே என் இலக்கு. ” என அவர் தெரிவித்துள்ளார்.
