தேர்தலுக்கு பிறகு… அண்ணாமலை தலைமையில் முதல் ஆலோசனை கூட்டம்!

Published On:

| By Selvam

பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மையக்குழு கூட்டம் சென்னை அமைந்தகரையில் நாளை (மே 27) நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் 6 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது. 7-ஆம் கட்ட இறுதி தேர்தல் ஜூன் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. தேர்தல் முடிந்ததும் பாஜக சார்பில் மாவட்ட, மாநில நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அந்த சமயத்தில் தேர்தல் பணத்தை பங்கு பிரிப்பது தொடர்பாக சில மாவட்டங்களில் பாஜக நிர்வாகிகளிடையே பிரச்சனை வெடித்தது. இந்த நேரத்தில் கூட்டம் நடத்தினால் பிரச்சனை மீண்டும் பூதகரமாகும் என்பதால் பாஜக நிர்வாகிகள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

தெலங்கானா மாநில தேர்தலி்ல் பிரச்சாரம் செய்ய மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் செல்வதால் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தசூழலில் தான், இன்னும் சில தினங்களில் நாடாளுமன்ற தேர்தல் முடிவடைய உள்ள நிலையில், பாஜக மாநில, மாவட்ட, மையக்குழு நிர்வாகிகள் கூட்டம் நாளை காலை 9.30 மணிக்கு சென்னை அமைந்தகரையில் உள்ள அய்யாவு மண்டபத்தில் நடைபெற உள்ளது.

மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக மேலிட பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள், வாக்கு எண்ணிக்கை, தேர்தல் கணக்கு செலவு விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பாஜக சார்பில் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

காவேரி கூக்குரல்… ஈஷாவுக்கு அமைச்சர் நேரு புதிய கோரிக்கை!

மழைக்கு ரெஸ்ட்… மீண்டும் கொளுத்தப்போகும் வெயில்: வானிலை மையம் அப்டேட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share