வக்ஃப் மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்… எடப்பாடிக்கு ஸ்டாலின் வைத்த கோரிக்கை!

Published On:

| By Selvam

வக்ஃப் வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த அரசினர் தீர்மானம் சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 27) ஒருமனதாக நிறைவேறியது. Tamil Nadu assembly resolution

வக்ஃப் வாரிய சட்டத்திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி, சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று அரசினர் தனித்தீர்மானத்தை கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்தில் பேசிய ஸ்டாலின், “இஸ்லாமிய மக்களை வஞ்சிக்கும் இந்த சட்டத்திற்கு எதிரான நமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டியது அவசிய அவசரமாகும்.

எனவே, கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அரசு மக்களவையில் அறிமுகம் செய்துள்ள வக்ஃப் வாரிய சட்டத் திருத்த சட்டமுன்வடிவினை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்று ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது” என்று தெரிவித்தார்.

இந்த மசோதாவிற்கு அதிமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன. இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்தது. இதனையடுத்து வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா ஒருமனதாக நிறைவேறியது.

இதனை தொடர்ந்து அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் பேசும்போது,

“டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். இருமொழி கொள்கை மற்றும் தமிழ்நாட்டு நலன் சார்ந்த கோரிக்கைகளை அவரிடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். அதற்காக இந்த அவையின் சார்பாக நான் அவரை வாழ்த்துகிறேன். அதேபோல டெல்லிக்கு செல்லும்போது வக்ஃப் பிரச்சனை குறித்து வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். Tamil Nadu assembly resolution

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share