சிங்கப்பூரை சேர்ந்தவர் சுரேஷ். தீவிர முருக பக்தர். இவரின் சகோதரர் ஊனமுற்றவர். இந்த நிலையில், தைப்பூசத்தின் போது காவடி தூக்குவது போல தனது சகோதரரை தூக்கிக் கொண்டு மலேசியாவின் பிரசித்தி பெற்ற பத்துமலை முருகன் கோவில் படி ஏறி சுரேஷ் சென்றார்.
இந்த காட்சியை பலரும் வீடியோ எடுத்து இணையத்தில் பரப்பினர். இதையடுத்து, சுரேசும் அவரின் சகோதர பாசமும் நெட்டிசன்களால் மனதார பாரட்டப்பட்டது.

தொடர்ந்து, சிங்கப்பூரின் ஸ்ட்ரெயிட் டைம்ஸ் நாளிதழ் சுரேஷிடத்தில் பேட்டி எடுத்தது. அப்போது, அவர் கூறியதாவது,
“ஒவ்வோரு ஆண்டும், தைப்பூசம் நிகழ்வின் ஒரு பகுதியாக, எனது 41 வயதான சகோதரர் குணசீலனை எனது தோள்களில் தூக்கிக்கொண்டு பத்து மலை கோவிலுக்கு செல்வேன். சிறு குழந்தையாக இருந்தபோதே செரிப்ரல் பால்ஸி நோயால் என் சகோதரர் பாதிக்கப்பட்டவர். வாழ்நாள் முழுவதும் பல சவால்களை எதிர்கொண்டுள்ளார். அவரது சகோதரனாக, அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம்.
சமீபத்தில் அவரை இந்தியா அழைத்துச் சென்றேன். 11 நாட்கள் முழுவதும் அவரை தூக்கிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனது உடல் முழுவதும் வலி எடுத்தது. ஆனாலும், அவரின் மகிழ்ச்சியைக் காணும்போது எனது வலிகள் எல்லாம் மறைந்து விடுகின்றன.
நான்தான் வீட்டில் சம்பாதிக்கும் ஒரே ஆள். என் சகோதரருக்கு உலகம் முழுக்க சுற்றி பார்க்க ஆசை. அந்த ஆசையை நிறைவேற்ற வேண்டுமென்பதே என் ஆசை” என்று தெரிவித்துள்ளார்.

சுரேஷின் இன்ஸ்டா பக்கத்திலும் தனது சகோதரர் பற்றிய வீடியோதான் நிரம்பியிருக்கிறது. பத்து மலையில் சகோதரருடன் அவர் மலை ஏறிய வீடியோ வைரலான பிறகு, பலரும் அவரின் இன்ஸ்டா பக்கத்துக்கு சென்று வாழ்த்து கூறி வருகின்றனர். ”சொல்ல வார்த்தைகள் இல்லை உங்களுக்கும் உங்கள் சகோதரருக்கு எனது அன்பு” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். ”நீங்கள்தான் எங்கள் ஹீரோ என்றும் உங்கள் பந்தம் என்றென்றும் தொடரட்டும்” என்று மற்றொருவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இருவரும் ஒரே மாதிரி ஹேர்ஸ்டைல் வைத்திருப்பார்கள். எங்கு சென்றாலும், இருவரும் ஒன்று போல உடை அணிந்து செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.