தமிழ் கட்டாய பாடம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Published On:

| By Prakash

தமிழ் கட்டாய பாடமாக உள்ளதா என்பது குறித்து அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

’தமிழக பள்ளிகளில், தமிழை கட்டாயமாக்கி 2006இல் இயற்றிய சட்டத்தை முறையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை’ என ராகவன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவில், ’தமிழாசிரியர் பதவிகளுக்கு அரசு ஒப்புதல் வழங்காததால், தமிழாசிரியர்களை நியமிக்க முடியவில்லை’ என பல அரசு உதவி பெறும் பள்ளிகள் புகார் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், 2015-16ஆம் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட பாடத் திட்ட பள்ளிகளில் 10ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடச் சட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும் என உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்த நிலையில், அதை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

tamil is a compulsory subject enquiry in govt highcourt order

கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மாநில மொழிகளை கட்டாயமாக்கிய சட்டத்தை அமல்படுத்தவில்லை என்றால் அதற்கு தண்டனை விதிக்கும் வகையில் பிரிவுகள் உள்ளதாகவும்,

தமிழ் கட்டாய பாடச் சட்டத்தில் அதுபோல எந்த பிரிவுகளும் இல்லாததால், இச்சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த முடியவில்லை’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (டிசம்பர் 21) உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘தமிழ் கட்டாய பாடச் சட்டம் அனைத்துப் பள்ளிகளிலும் அமல்படுத்தப்படுகிறதா’ என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று கூறியதுடன், ’இந்த மனுவுக்கு தமிழக அரசு இரு வாரங்களில் பதிலளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டனர்.

ஜெ.பிரகாஷ்

டிஜிட்டல் திண்ணை: கட்சியை கலைக்கிறாரா கமல்?

பிறமொழியை திணித்தால் ஏற்கமாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share