சினிமா என்பது திரையரங்குக்கானது. வெப் சீரிஸ் என்பது ஓடிடி தளங்களுக்கானது. ஓடிடி வியாபாரத்தை பெரிதாக நம்பாமல் திரையரங்கை நம்பி படம் எடுத்தவரை சினிமா ஆட்களின் கையில் சினிமா இருந்தது.
கோவிட் சமயத்தில் திரையரங்கில் வெளியிட முடியாத நிலையால் மக்கள் வீட்டில் இருந்தே பார்க்க வசதியான ஓடிடி தளங்களுக்கு மவுசு வந்தது.
அப்போது திரையரங்கில் வர வேண்டிய சில நல்ல படங்கள் ஓடிடி யில் ரிலீஸ் ஆனது. அதில் தப்பும் இல்லை. அப்படி நடந்ததால் சார்பட்டா பரம்பரை என்ற அற்புதமான படத்தை தியேட்டரில் பார்க்கும் வாய்ப்பை ரசிகர்கள் இழந்தார்கள்.
சூர்யாவின் ஜெய் பீம் ஓடிடி க்காகவே எடுக்கப்பட்டது.
எப்போ தியேட்டர் நார்மல் நிலைக்கு வந்ததோ அப்பவே தமிழ் சினிமா தயாரிப்பாளர்களும் படைப்பாளிகளும் மீண்டு வந்திருக்க வேண்டும்.
ஆனால் எது நல்ல கதை என்று தெரியாமலே படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், எப்படியாவது அவர்களை கவரும் வகையில் பேச மட்டும் தெரிந்த திறமை இல்லாத படைப்பாளிகள் எல்லோரும், எதுக்கு தியேட்டருக்கு படம் எடுக்கணும். ஓடலைன்னா கஷ்டம். எனவே ஓடிடி யில் ஆட்களை எப்படியாவது சரிக்கட்டி விட்டால் அவர்களே காசு கொடுப்பார்கள். அதற்கு ஒரு லாபம் வைத்துக் கொண்டு எடுத்து கொடுத்து விடலாம் என்று, நோகாமல் நோன்பு கும்பிட ஆசைப்பட்டார்கள்.
ஓடிடி நிறுவனங்கள் கொஞ்சம் ஜகா வாங்க அப்புறம் ஓடிடி யில் விலை போகிற மாதிரி படங்களை எடுத்து தியேட்டரில் ஜெயிக்கும் திறமை இல்லாதவர்கள் எல்லாம் ஓடிடி மூலம் கிடைக்கும் பணத்தை முக்கியமாகக் கருதி படங்களை எடுத்தார்கள். ஒரு நிலையில் அப்படி வருகிற படங்கள் எல்லாம் மக்களைக் கவரவில்லை என்ற நிலையில் ஓடிடி நிறுவனங்கள் விழித்துக் கொண்டன. படங்களைக் கொண்டு வருவோரிடம் வச்சிட்டு போங்க அப்புறமா சொல்றோம் என்றார்கள்.
ஆரம்பத்தில் ஓடிடி கள் பெருந்தொகை கொடுத்து படங்களை வாங்க, அதனால் நடிகர்களின் சம்பளம் மற்றும் படங்களின் பட்ஜெட் தாறுமாறாக உயர்ந்தது. ஆனால், தியேட்டர் மற்றும் சாட்டிலைட் உரிமைகளின் சந்தை மதிப்பு சரியத் தொடங்கியது. அதே சமயம், பெரிய விலைக்கு வாங்கப்பட்ட பல படங்கள் திரையரங்கில் தோல்வியைத் தழுவியதால், OTT தளங்களும் எதிர்பார்த்த பார்வையாளர்களை பெறாமல் பெரும் இழப்புகளைச் சந்தித்தன.
இந்த இழப்புகளின் காரணமாக, தற்போது படங்களை வாங்கும் உத்திகளைக் கடுமையாக்கியுள்ளன. பல நிபந்தனைகளைச் சேர்ப்பதுடன், இப்போது இன்னும் ஒரு படி மேலே போகிறது ஓடிடி நிறுவனங்கள்.
அதற்கான முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறது நெட் ஃ பிலிக்ஸ்.
திரைப்படங்களை அதிக விலைக்கு வாங்கும் வழக்கத்தை மாற்றி, இனி அதிக வெப் சீரிஸ் மற்றும் ஒரிஜினல் தயாரிப்புகளை உருவாக்க முடிவெடுத்துள்ளது..
ஹைதராபாத்தில் பெரிய அலுவலகத்தைத் திறந்துள்ள Netflix, இனி வெளி தயாரிப்பாளர்களின் பெரிய படங்களை அதிக விலைக்கு வாங்குவதைக் குறைத்துக் கொண்டு, சொந்தமாக வெப் சீரிஸ் மற்றும் ஒரிஜினல் திரைப்படங்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கான மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக இருந்த Netflix-ன் இந்தக் கொள்கை மாற்றம், பெரிய படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்களின் வருவாயை நேரடியாகப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், வெறும் எதிர்பார்ப்பு, நட்சத்திர கவர்ச்சியை மட்டுமே நம்பியிருக்காமல், உண்மையிலேயே தரமான படங்களை வழங்கும் தயாரிப்பாளர்களால் மட்டுமே இனி நிலைத்து நிற்க முடியும் என்ற புதிய யதார்த்தம் உருவாகியுள்ளது.
இது அதிகமானால் ஓடிடி நிறுவனங்கள் மட்டுமே படங்களைத் தயாரிக்கும். தயாரிப்பாளர்கள் அங்கே வேலைக்கு வேண்டுமானால் போகலாம்.
இனிமேலாவது தயாரிப்பாளர்கள் தரமான படைப்பாளிகளுக்கு படம் கொடுப்பார்களா? இல்லை ஓடிடி கம்பெனிகளின் நிர்வாகப் பொறுப்பில் உட்காருவார்களா என்று பார்ப்போம்.
- ராஜ திருமகன்
