தமிழை கட்டாயப் பாடமாக்க வேண்டும்: ராமதாஸ்

Published On:

| By Balaji

அனைத்து கல்வி வாரிய பள்ளிகளிலும் தமிழை கட்டாயப் பாடமாக்க வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரில் கடந்த வாரம் நடைபெற்ற கன்னட கல்விக் கழகத்தின் 85-ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா, கர்நாடகத்தில் அனைத்துக் கல்வி வாரிய பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கன்னடம் கட்டாயப் பாடம் ஆக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இதற்காக 2015ஆம் ஆண்டில் தனிச்சட்டமே இயற்றப்பட்டிருக்கிறது. கேரளம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் 2018-ஆம் ஆண்டு முதல் அனைத்து வகை பள்ளிகளிலும் முறையே மலையாளம், தெலுங்கு கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனைக் குறிப்பிட்டு இன்று (மார்ச் 15) அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “தமிழின் பெருமை பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், தமிழ்நாட்டில் அனைத்து வகையான பள்ளிகளிலும் தமிழை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்ற எளிய இலக்கைக் கூட நம்மால் எட்ட முடியவில்லை என்பது தான் வேதனையளிக்கும் உண்மையாகும். இந்த நிலைக்காக அனைவரும் வருந்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மற்ற மாநிலங்களின் மொழிப்பாடத் திட்டம் குறித்து குறிப்பிட்டுள்ள ராமதாஸ், “இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் தமிழை கட்டாயப் பாடமாக்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அது இன்னும் முழுமையாக செயல்படுத்தப்படாமல் இருப்பது தமிழுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் தமிழை ஒரு பாடமாக படிக்காமலேயே பட்டப்படிப்பு வரை படிக்கலாம் என்ற அவல நிலை இப்போது வரை நீடிக்கிறது. தமிழ் கட்டாயப்பாடச் சட்டத்தின்படி ஒவ்வொரு பள்ளியும், ஒவ்வொரு ஆண்டிலும் எந்தெந்த வகுப்புகளுக்கு தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட்டது என்பது குறித்து கல்வித்துறைக்கு அறிக்கை அளிக்க வேண்டும். ஒன்பதாவது வகுப்பு வரை தமிழை கட்டாயப்பாடமாக கற்றுக் கொடுத்ததாக அறிக்கை அளித்த பள்ளிகள், பத்தாவது ஆண்டில் மட்டும் தங்களிடம் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் தமிழ் கற்றுத்தர இயலவில்லை என்று கூறுவது ஏமாற்று வேலை” என்று கூறியுள்ளார்.

மேலும், “தமிழ்நாட்டில் அனைத்து கல்வி வாரிய பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயமாக்க சட்டப்படி எந்த தடையும் இல்லை. இன்னும் கேட்டால் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் தமிழை கட்டாயமாக படிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பு அளித்திருக்கிறது” என்று சுட்டிக்காட்டிய ராமதாஸ், உரிய ஆணைகளை பிறப்பித்து தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து கல்வி வாரியப் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடமாக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

**எழில்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share