ADVERTISEMENT

விமர்சனம் : பரம்பொருள்!

Published On:

| By Kavi

சிலைக்கடத்தல் பின்னணியில் ஒரு ‘த்ரில்லர்’!

சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் சிலைக்கடத்தல் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும். அந்த களம் பற்றிய விவரணையுடன், அந்த பின்னணியில் இயங்கும் உலகம் குறித்த பார்வைகளுடன் ஒரு படம் வந்தால் எப்படியிருக்கும் என்ற யோசனை அப்போது தோன்றியது. அதற்குப் பதில் சொல்லும்விதமாக ‘பரம்பொருள்’ பட ட்ரெய்லர் சிலைக்கடத்தல் குறித்துப் பேசியது. அது மட்டுமல்லாமல், இந்த படத்தில் நாயகன் அமிதாஷ் பிரதானுக்கு இணையான இடத்தை சரத்குமார் ஆக்கிரமித்திருக்கிறார் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

சரி, எப்படியிருக்கிறது ‘பரம்பொருள்’?

சிலைக்கடத்தல் பின்னணி!

ADVERTISEMENT

பழமையான பொருட்களை விற்கும் சற்குண பாண்டியன் கடையில் பணியாற்றியவர் ஆதி (அமிதாஷ் பிரதான்). ஒரு விபத்தில் சற்குணம் மரணமடைய, அவர் வேலையிழக்க நேரிடுகிறது. அந்த நேரத்தில், குடல் சிதைவுக்கு ஆளாகி அவதிப்படுகிறார் அவரது தங்கை.

அதனைச் சரி செய்யும் அறுவைச்சிகிச்சையை மேற்கொள்ள ஐம்பது லட்ச ரூபாய் பணம் தேவைப்படும் என்ற நிலைமை. அந்தப் பணத்தைப் புரட்டுவதற்கான வேலைகளில் ஈடுபடும்போது, தனது குடும்பத்தின் சரிவுக்கு காரணமான ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரை காண்கிறார் ஆதி. அவரது பெயர் மைத்ரேயன் (சரத்குமார்).

ADVERTISEMENT

நேர்மை என்றால் என்ன விலை என்று கேட்பவர் மைத்ரேயன். எப்படியாவது பணம் சம்பாதித்துவிட வேண்டுமென்று துடிக்கும் அவருக்கு, நேர்மையான காவல் துறை அதிகாரிகளைக் கண்டாலே அலர்ஜி. ஒருநாள், ஒரு உளவுத்துறை காவலர் மூலமாக ஒரு சிலைக்கடத்தல் கும்பல் குறித்த தகவல் கிடைக்கிறது. அப்போது, சற்குணம் வசமிருந்த சில சிலைகள் தற்போது வேறு நபர்களிடம் இருப்பது அவருக்குத் தெரிய வருகிறது

தங்கையின் மருத்துவச் செலவுக்காக, ஒருநாள் அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் பூட்டப்பட்ட வீட்டுக்குள் திருடச் செல்கிறார் ஆதி. உள்ளே நுழைந்த சில நிமிடங்களிலேயே, அருகில் புல்லட் வரும் சத்தம் கேட்கிறது. ஜன்னலை திறந்து பார்த்தால், குடியிருப்பின் கீழே மைத்ரேயன் வந்து நிற்கிறார். அவரது வீட்டினுள் தான் ஆதி நின்று கொண்டிருக்கிறார். அங்கிருந்து வெளியேற முயற்சிக்கையில், ஆதியை அவர் கையும் களவுமாகப் பிடிக்கிறார்.

காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்று விசாரிக்கையில், சற்குணத்திடம் ஆதி வேலை செய்தது தெரிய வருகிறது. உடனே, அவரைச் சார்ந்தவர்களிடம் சிலைக்கடத்தல் தொடர்பாக ஏதேனும் துப்பு கிடைக்குமா என்று கேட்கச் சொல்கிறார் மைத்ரேயன். ஆதியும் அவ்வாறே செய்கிறார். அப்போது, ஒரு நபரிடம் பழங்காலத்து வெண்கலச் சிலை இருப்பது தெரிகிறது. அவரை ஆதியும் மைத்ரேயனும் நேரில் சந்திக்கின்றனர். அப்போது ஏற்படும் களேபரத்தில், அந்தச் சிலை அவர்கள் கைக்கு மாறுகிறது.

அதன் தொடர்ச்சியாக, கையில் கிடைத்த வெண்கலச் சிலையைக் கைமாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார் ஆதி. அப்போது, வெளிநாட்டைச் சேர்ந்த சிலைக்கடத்தல் கும்பல் (ராமகிருஷ்ணன், வின்சென்ட் அசோகன்) ஒன்றின் அறிமுகம் கிடைக்கிறது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலை என்பதால், அவர்கள் சொல்லும் விலையை ஏற்க மைத்ரேயன் சம்மதிக்கவில்லை. அதனால், அந்த கும்பல் அவர் சொல்லுக்குக் கட்டுப்பட உடன்படுகிறது.

ஆனால், அதற்குள் எதிர்பாராத சம்பவமொன்று நிகழ்கிறது. எந்தக் கும்பலிடம் இருந்து ஆதியும் மைத்ரேயனும் சிலையைப் பறித்தார்களோ, அவர்களுடனே மீண்டும் மோதும் சூழல் ஏற்படுகிறது. அந்தச் சம்பவத்தில், அந்தச் சிலை உடைந்து போகிறது. குறிப்பிட்ட நாட்களுக்குள் வெளிநாட்டுக் கடத்தல் கும்பலிடம் அந்த சிலையை ஒப்படைப்பதாக வாக்குறுதி தந்த காரணத்தால், என்ன செய்வதென்று புரியாமல் ஆதியும் மைத்ரேயனும் குழம்புகின்றனர். முடிவில், அதே போன்றதொரு சிலையைச் செய்வதென்று முடிவு செய்கின்றனர்.

அது சாத்தியமானதா? சிலைக்கடத்தல் கும்பலுக்கு அந்த உண்மை தெரிந்ததா? பிரச்சனைகளில் இருந்து ஆதியும் மைத்ரேயனும் மீண்டார்களா? அதன்பிறகு என்னவானது என்பதே ‘பரம்பொருள்’ படத்தின் மீதிக்கதை.

சிலைக்கடத்தல் பின்னணியில் கதை அமைந்தாலும், அது பற்றிய தெளிவான விளக்கங்கள் ஏதும் திரைக்கதையில் கிடைக்கப் பெறவில்லை என்பதே உண்மை. அதையும் மீறி, படம் நம்மை சுவாரஸ்யப்படுத்துகிறது என்பதையும் மறுக்க முடியாது.

ஆங்காங்கே விறுவிறுப்பு!

இந்த படத்தின் நாயகனான அமிதாஷ், பெரும்பாலான காட்சிகளில் சலனமற்ற பாவனையுடன் உலாவியிருக்கிறார். கதைக்குத் தேவை என்ற காரணத்தோடு, நாயகியுடன் தோன்றும் இடங்களிலும் கூட அதையே பின்பற்றியிருப்பது செயற்கையாகத் தெரிகிறது. மற்றபடி, அளவாக நடித்து, அழகாகச் சிரித்து, எளிதாகக் கவர்ந்திழுக்கிறார்.

நாயகி காஷ்மீராவுக்குப் பெரிதாக ‘ஸ்கோப்’ இல்லை. ஆனால், அவர் இடம்பெறும் காட்சிகளில் பாந்தமாகப் பொருந்தியிருக்கிறார்.

’போர்தொழில்’ படத்திற்குப் பிறகு, கிட்டத்தட்ட நாயகனுக்கு இணையாக வந்து போகும் வேடம் சரத்குமாருக்குக் கிடைத்திருக்கிறது. வில்லத்தனம் மிகுந்த பாத்திரம் என்றபோதும், அவர் அதனைக் கையாண்டிருக்கும் விதம் அழகு; அது, அவரது அனுபவத்தை உணர்த்துகிறது.

ரவி வெங்கட்ராமன், ராமகிருஷ்ணன், வின்சென்ட் அசோகன் ஆகியோர் வில்லத்தனம் காட்டப் பிரயத்தனப்பட்டிருக்கின்றனர்.

இந்தக் கதையில் பாலாஜி சக்திவேல் ஏற்ற பாத்திரம் மிகச்சிறியது. ஆனால், கிளைமேக்ஸுக்கு முன்னதாக சரத்குமார் – அமிதாஷ் உடன் பேரம் பேசும் காட்சி, அவர் ‘ஸ்கோர்’ செய்யும் இடமாக உள்ளது.

இவர்கள் தவிர்த்து சார்லஸ் வினோத், டி.சிவா, பவா செல்லத்துரை உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.

மிக எளிமையான கோணங்களில் அமைந்து, தேவையான இடங்களில் பரபரப்பூட்டுகிற நகர்வுகளைத் தந்து, கதையோடு ஒன்ற வைக்கிறது எஸ்.பாண்டிக்குமாரின் ஒளிப்பதிவு.

நாகூரான் ராமச்சந்திரனின் படத்தொகுப்பு, கதை சொல்வதில் கொஞ்சம் தடுமாறியிருக்கிறது. சிலையின் பின்னே கதை சென்றபிறகு, நாயகன் குடும்பத்தினரின் நிலையைக் காட்டவே இல்லை. ‘கிளைமேக்ஸ்’ திருப்பத்திற்காகக் கதையில் அந்த பள்ளம் விழுந்திருப்பது புரிந்தாலும், அதனை ஏற்க மறுக்கிறது மனது.

குமார் கங்கப்பனின் கலை இயக்கத்தில், சிலைகள் செய்யப்படும் காட்சிகள் கண்களைக் கவரும் இடங்கள். மற்றபடி, படம் முழுக்க ‘துருப்பிடித்த’ தொனியில் காட்சிகள் அமைய அவரது குழு உழைத்திருக்கிறது.

வழக்கம்போல, பின்னணி இசையில் விறுவிறுப்பூட்டியிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. ‘அசைவின்றி’ பாடல் அவரது அக்மார்க் மெலடி ரகம். ‘ரிப்பர’ பாடல் திரைக்கதை ஓட்டத்தில் வேகத்தடையாகத் தெரிந்தாலும் ரசிக்க வைக்கிறது.

தொடக்கக் காட்சியில் இருந்தே கதை சொல்லத் தொடங்கியிருப்பது இயக்குனர் சி.அரவிந்த்ராஜின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. அதேநேரத்தில், கிளைமேக்ஸ் காட்சியை மனதில் வைத்தே சில விஷயங்களைச் சொல்லாமல் தவிர்த்திருப்பது ஏமாற்றம் தருகிறது. மற்றபடி, ஆங்காங்கே விறுவிறுப்பூட்டி நம்மை ரசிக்க வைக்கிறது ‘பரம்பொருள்’.

த்ரில் தருகிறதா?

நிச்சயமாக, இப்படம் சமீபத்தில் வெளியான ‘போர்த்தொழில்’ உடன் ஒப்பிடப்படும். காரணம், இதிலும் நாயகன் உடனேயே திரியும் விதமாகச் சரத்குமாரின் பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. போலீஸ் பாத்திரம் என்றபோதும், இதில் சரத் காட்டியிருக்கும் வில்லத்தனம் நிச்சயம் வரவேற்பைப் பெறும்.

உதாரணமாக, ‘மங்காத்தா’ இடைவேளை காட்சி போல இதிலும் மைத்ரேயன் ஆக வரும் சரத்குமாருக்கு ஒரு காட்சி உண்டு. அதில், தனக்கு கிடைக்கும் லாபத்திற்காக யாரைப் பலியாடாக ஆக்குவது என்று மைத்ரேயன் யோசிப்பார். அப்போது, கதவு தட்டப்படும் சத்தம் கேட்கும். கதவைத் திறந்தவுடன் எதிரே நிற்கும் ஆதியைப் பார்த்து, ‘ஆடு வா’ என்பார். அதற்கு, தியேட்டரில் கிடைத்த ரெஸ்பான்ஸ் ‘ஓஹோ’ ரகம். அது போன்ற இடங்களைப் பார்த்து பார்த்து நிறைக்காதது ஒரு குறை.

இந்தக் கதையில், இன்ஸ்பெக்டராக வரும் சரத்குமார் சார்ந்த காவல் நிலையம் திரையில் காட்டப்படுவதில்லை. எப்போதெல்லாம் அவர் அமிதாஷ் உடன் சுற்றுகிறார் என்ற ‘லாஜிக் மீறல்கள்’ விளக்கமாகச் சொல்லப்படுவதில்லை. முக்கியமாக, அமிதாஷின் மொபைல் எண்ணைக் கண்காணிக்க எண்ணுபவர், ஏன் அவரது குடும்பப் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்கவில்லை என்ற கேள்விக்குப் பதிலே இல்லை.

இது போன்ற குறைகள் சில நமக்குப் புலப்படும் என்றபோதும், ஒரு நேர்த்தியான த்ரில்லர் படம் பார்த்த உணர்வை நிச்சயம் ‘பரம்பொருள்’ உண்டாக்கும்!

உதய் பாடகலிங்கம்

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

அதிபராக முயற்சிக்கும் மோடி: ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஸ்டாலின் கண்டனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share